எரியாத விளக்குகளால் இருளில் மூழ்கும் சிறுமாத்தூர்-படப்பை சாலை: அச்சத்தில் பொது மக்கள்

பெரும்புதூர், அக்.12: குன்றத்தூர் ஒன்றியம் சாலமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட சிறுமாத்தூர் கிராமத்தில் 500க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் தொழிற்சாலை ஊழியர்கள், படப்பை வழியாக பெரும்புதூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி, தொழிற்சாலைகளுக்கு செல்ல சிறுமாத்தூர்-படப்பை சாலையை பயன்படுத்தி வருகின்றனர். குன்றத்தூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள இந்த சாலை கடந்த 2017ம் ஆண்டு ரூ 60 லட்சம் மதிப்பில் சீரமைக்கப்பட்டது. தற்போது இந்த சாலையை பெரும்பாலான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது இந்த சாலையில் ஒரு மின் விளக்கு கூட பொருத்தப்படவில்லை. இதனால் சாலை முழுவதும் இருளில் மூழ்கி கிடக்கிறது. இதனால் இரவில் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்தில் கடந்து செல்கின்றனர்.  இதுகுறித்து அப்பகுதி மக்கள்  கூறியதாவது, குன்றத்தூர் ஒன்றியம் சாலமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட சிறுமாத்தூர் கிராமத்தில் 5 தனியார் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. மேலும் 500க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

தொழிற்சாலைக்கு செல்லும் வாகனங்கள் சிறுமாத்தூர்-படப்பை சாலையை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த கிராம மக்கள் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு செல்ல இந்த சாலை பிரதானமாக உள்ளது. மேலும் பஸ் வசதி இல்லை. இதனால் இந்த கிராமத்தில் இருந்து படப்பை பஸ் நிலையம் வரை நடந்து அல்லது அவ்வழியாக செல்லும் இரு சக்கர வாகனங்கள் உதவி கேட்டு செல்கின்றனர். தற்போது இந்த சாலையில் உள்ள மின் கம்பத்தில் ஒரு மின் வளக்கு கூட பொருத்தபடவில்லை. இதனால் இந்த சாலை இருளில் மூழ்கி கிடக்கிறது. இதனால் இரவில் இவ்வழியாக செல்லும் பொது மக்கள் மற்றும் பெண்கள் கடும் அச்சத்தில் உள்ளார். இதுகுறித்து குன்றத்தூர் ஒன்றிய பி.டி.ஓ., மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பல முறை புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே  படப்பை-சிறுமாத்தூர் சாலையில் மின் விளக்குகள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: