அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என எம்பி, எம்எல்ஏ மீது குறை கூறாதீர்கள்

மணப்பாறை, அக்.11:  அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என எம்பி, எம்எல்ஏ மீது குறை கூறாதீர்கள் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆவேசமடைந்தார். திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வையம்பட்டி ஒன்றிய பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை நேற்று பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். அவர் அப்போது நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த 2014ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிட்டு 37 இடங்களில் வெற்றி பெற்றது. இதேபோல் வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் கட்சி தலைமை தான் முடிவு எடுக்கும் என்று கூறினார். அப்போது நீங்கள் தனித்து போட்டி என்று சொன்னதற்கு மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அவர் தமிழகம் முழுவதும் தனித்து நிற்பார் என கூறியுள்ளாரே என கேட்டதற்கு, நான் என்றால் தம்பிதுரை இல்லை. அதிமுகவைதான் அப்படி அவர் சொல்லியுள்ளார். இதை சொன்னதற்கு அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனுக்கு நன்றி. கடந்த தேர்தலில் பொன் ராதாவோ, அவரது கட்சியோ ஆதரித்து வெற்றி பெறவில்லை. தனித்து நின்று தான் வெற்றி பெற்றோம் என்று கூறினார்.

தம்பிதுரை குறைகளை கேட்கச்சென்ற இடங்களில் எல்லாம்  கிராமங்களில் செய்த அடிப்படை வசதிகளான தொகுப்பு வீடுகள் கொடுத்தது, சாலை வசதிகள் செய்தது, கழிவறை அமைத்தது மற்றும் குடிநீர் வசதிகள் செய்து கொடுத்தற்கான  பட்டியலை அதிகாரிகளிடம் வாங்கி நீண்ட நேரம் வாசித்துவிட்டு, எம்.பி, எம்எல்ஏ எதுவும் உங்கள் பகுதியில் செய்யவில்லை என குறை கூறாதீர்கள் என்று தெரிவித்தார். கலெக்டர் ராஜாமணி உள்பட அனைத்து துறை அதிகாரிகள் உடன் சென்றனர். வையம்பட்டி ஒன்றியம் தண்டல்காரனூரில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி அப்பகுதி மக்கள் ஆர்.எஸ்.ரோட்டில் 70க்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். கலெக்டர் ராஜாமணி அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து சாலைமறியலை கைவிட்டனர். பின்னர் அப்பகுதிக்கு வந்த தம்பிதுரை, பொதுமக்களிடம் குறைகளை கேட்டு நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

Related Stories: