பணி புறக்கணிப்பு போராட்டம் பெல் ஊழியர்கள் 14 பேர் வடமாநிலங்களுக்கு மாற்றம்

திருச்சி, அக்.11:  பதவி உயர்வுகோரி பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பெல் வெல்டிங் தொழிலாளர்கள் 14 பேரை இடமாற்றம் செய்து நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. திருச்சி பெல் நிறுவனத்தில் 7ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். இங்கு தயாரிக்கப்படும் பாய்லர்களில் வெல்டிங் பிரிவின் பங்கு முக்கியமானது. வெல்டிங் பிரிவில் மட்டும் 970 பேர் பணியாற்றுகின்றனர். பிற பிாிவு தொழிலாளர்களுக்கு 5 ஆண்டுக்கு ஒரு முறை பதவி உயர்வு வழங்கப்படும் நிலையில், வெல்டிங் தொழிலாளர்களுக்கு மட்டும் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை பதவி உயர்வு வழங்கும் நடைமுறை பின்பற்றப்பட்டு வந்தது. சில ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்கப்படவில்லை. இந்நிலையில் தங்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். வெல்டிங் ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வெல்டிங் தொழிலாளர்கள் வலியுறுத்தி கடந்த மாதம் 28ம் தேதி உள்ளிருப்பு போராட்டத்தை அறிவித்தனர். தொழிற்சங்க பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தைக்கு பின்னர் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டனர்.

இந்நிலையில் கடந்த 2ம் தேதி முதல் தொடர் விடுப்பு போராட்டத்தை துவங்கினர். இதில் 800 தொழிலாளர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் 600 பேர் தினமும் விடுமுறை எடுத்து போராடி வருகிறார்கள். இதனால் பெல் நிர்வாகம் போராட்டக்குழு தலைவர்கள் சங்கர் கணேஷ், பொதுச்செயலாளர் சதீஷ்குமார், துணைத்தலைவர் வீரபாண்டியன், நிர்வாகிகள் ஜோதி, மஞ்சுநாத், திலக், பாஸ்கரன், சரவணன், விஜயராஜ் ஆகிய 9 பேரை ஏற்கனவே சஸ்பெண்ட் செய்தது. அடுத்த கட்டமாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வெல்டிங் பிரிவு தொழிலாளர்கள்  14பேரை வடமாநிலங்களில் உள்ள பல்வேறு பெல் தொழிற்சாலைகளுக்கு இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதனால் வெல்டிங் தொழிலாளர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Related Stories: