ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியர்களை கொண்டு காலிப்பணியிடம் நிரம்பும் முடிவை கைவிடா விட்டால் போராட்டம்: டிஆர்இயூ எச்சரிக்கை

மன்னார்குடி, அக்.11: ரயில்வேயில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களை கொண்டு காலியாக உள்ள ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட  காலிப் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கு நிர்வாகம் முடிவு செய்துள்ள திட்டத்தை கைவிடாவிட்டால் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று டிஆர்இயூ எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியனின் மாநில துணை பொதுச்செயலாளர் மனோகரன் விடுத்துள்ள ரயில்வேயில் 13 லட்சம் ஊழியர்கள் உள்ளனர். கடந்த ஆகஸ்ட் 3ம் தேதி பாராளுமன்ற கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த ரயில்வே அமைச்சர் பீயூஸ் கோயல், ரயில்வேல் 2,53,324 பணியிடங்கள் காலியாக உள்ளது என தெரிவித்தார். இதில் 1,32,646 குரூப்-டி காலி பணியிடங்கள். இந்த ஆண்டு துவக்கத்தில் 62,907 குரூப்-டி மற்றும் 26,502 உதவி லோகோ பைலட்டுகள் பணியிடங்கள் நிரப்ப தேர்வு ஆணையம் அறிவிப்புகள் வெளியிட்டது. இது தவிர ரயில்வே என்ஜினீயர்கள் பணிக்கு4,528, சித்த ரஞ்சன் டீசல் லோகோமெட்டிக் ஒர்க்சாப் பணிக்கு 382, ரயில்டெல் நிறுவன பணிக்கு 32, ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவன பணிக்கு 64 என குறைந்த எண்ணிக்கையில் பணியாளர்கள் தேர்வும் நடந்து வருகிறது.

குரூப்-டி பணியிடங்களுக்கு ஒரு கோடியே 90 லட்சம் விண்ணப்பங்களும், உதவி லோகோ பைலட்டுகள் பணியிடங்களுக்கு 47.56 லட்சம் விண்ணப்பங்கள் தேர்வு ஆணையத்திற்கு வந்து குவிந்தன. இதில் 67 சதவீதம் பேர் பட்டம் மற்றும் பட்ட மேற்படிப்பு படித்தவர்கள். ஒரு லட்சத்திற்கும் குறைவான காலிப்பணியிடங்களை ரயில்வே நிரப்புகிறது. மேலும் தேர்வு செய்யப்பட இருப்பவர்கள் பணிக்கு வர பல மாதங்கள் ஆகும். பணியாளர்கள் பற்றாக்குறை கடுமையாக உள்ளது. கேட்கீப்பர்கள், லோகோ பைலட்டுகள், கிளார்க்குகள், தண்டவாள பராமரிப்பாளர்கள், பாயிண் ட்ஸ் மேன்கள், கண்காணிப்பாளர்கள், என்ஜினியர்கள், தொழில் நுட்ப ஊழியர்கள் பணிகளுக்கு ஓய்வு பெற்றவர்களை ரயில்வே பணியமர்த்தி வருகிறது. மீண்டும் பணியமர்த்தப்படும் ஓய்வு பெற்றவர்கள் கடைசியாக பணி ஒய்வு பெறும்போது பெற்ற மாத சம்பளத்தில் 50 சதவிதம் ஊதியமாக பெருவார்கள். இவர்கள் 65 வயது வரை பணிபுரியலாம். தெற்கு ரயில்வே இதுவரை சுமார் 5 ஆயிரம் ஓய்வு பெற்றவர்களை பணியமர்த்தி இருக்கிறது. மேலும் 2000 பேரை பணியமர்த்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. 17 மண்டல ரயில்வேக்கள் மற்றும் உற்பத்தி பணிமனைகளில் இந்த நியமனங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதனால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ரயில்வே பணியிடங்கள் ஓய்வு பெற்றவர்களுக்கு நிரந்தர ஒதுக்கீடு என்ற அச்சம் எழுந்து உள்ளது. இத்திட்டத்தை  ரயில்வே அமைச்சகம் கைவிட வலியுறுத்தி தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் விரைவில்  கவன  ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: