இன்று முதல் 2019 ஜனவரி 3 வரை பட்டுக்கோட்டை- காரைக்குடிக்கு டெமு ரயில் இயக்கம்

பட்டுக்கோட்டை, அக். 11:  இன்று முதல் 2019 ஜனவரி 3 வரை பட்டுக்கோட்டையில் இருந்து காரைக்குடிக்கு டெமு ரயில் இயக்கப்படுகிறது என்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். 2012ம் ஆண்டு அகல ரயில் பாதை பணிகளுக்காக நிறுத்தப்பட்ட பட்டுக்கோட்டை- காரைக்குடி இடையே 75 கி.மீ அகல ரயில் பாதை பணிகள் முடிவடைந்து 6 ஆண்டுக்கு பின் கடந்த மார்ச் 30ம் தேதி பயணிகள் ரயில் இயக்கப்பட்டது. அன்றோடு சரி, அதன்பிறகு தொடர்ந்து ரயில் சேவை நடக்கவில்லை. இதனால் தொடர்ந்து ரயில் இயக்ககோரி ரயில்வே நிர்வாகத்துக்கு பட்டுக்கோட்டை சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கம், ரயில் பயணிகள் நலச்சங்கம், ரயில் பயணிகள் மற்றும் உபயோகிப்பாளர் நலச்சங்கம் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் முன்னறிவிப்பின்றி தெற்கு ரயில்வே கடந்த ஜூலை 2 முதல் மீண்டும் வாரத்தில் 2 நாட்கள் திங்கள், வியாழக்கிழமை மட்டும் டெமு ரயில் இயக்கப்படுமென அறிவித்தது. அதன்படி ஜூலை 5ம் தேதி ரயில் இயக்கப்பட்டது.

ஆகஸ்ட் 13ம் தேதி மீண்டும் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. எனவே பயண நேரத்தை ேமலும் குறைத்து ரயிலை தொடர்ந்து இயக்க வேண்டுமென பொதுமக்கள் விடுத்த கோரிக்கை செய்தி தினகரன் நாளிதழில் படத்துடன் வெளியானது. இதன் எதிரொலியாக தொடர்ந்து மீண்டும் செப்டம்பர் 20ம் தேதி முதல் ரயில் இயக்கப்பட்டது. இதைதொடர்ந்து இந்த மாதம் 4, 8, 11 ஆகிய தேதிகள் ரயில் ஓடிய நிலையில் பயண நேரத்தை குறைத்து தொடர்ந்து ரயிலை இயக்க வேண்டுமென ரயில்வே நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையேற்று பொதுமக்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக பட்டுக்கோட்டை- காரைக்குடி டெமு ரயில் இன்று 11ம் தேதி முதல் 2019ம் ஆண்டு ஜனவரி 3ம் தேதி வரை வாரத்தில் 2 நாட்கள் திங்கள், வியாழன் ஆகிய 2 நாட்கள் மட்டும் இயக்கப்படும். பயண நேரம் இரண்டரை மணி நேரம் என்று திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இது பொதுமக்களுக்கு ஆறுதல் அளித்தாலும் தினசரி ரயிலை இயக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

Related Stories: