கல்யாண ஓடையில் ஏற்பட்ட உடைப்பை காரணம் காண்பிக்காமல் கடைமடைக்கு தண்ணீர் திறக்க வேண்டும்.

அறந்தாங்கி, அக். 11: கல்யாண ஓடை வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பை காரணம் காட்டாமல் அறந்தாங்கி கடைமடை பகுதி விவசாயத்துக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் ஆயிங்குடி, நாகுடி பிரிவில் 168 ஏரிகள் மூலம் காவிரி பாசன விவசாயம் நடந்து வருகிறது. இந்த 168 ஏரிகளில் சில ஏரிகள் தஞ்சை மாவட்டத்தில் உள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட கடைமடை பகுதிக்கு இந்தாண்டு போதுமான தண்ணீர் வராததால் 168 ஏரிகளில் ஒரு ஏரிகூட இன்னும் நிரம்பாத நிலை உள்ளது. இந்த நிலையில் தற்போது தஞ்சை மாவட்டத்தில் அதிகளவு மழை பெய்து வருவதால் அந்த பகுதிக்கு தண்ணீர் தேவை குறைந்துள்ளது. தற்போது கல்யாண ஓடையில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் அந்த வாய்க்காலில் சென்ற தண்ணீரையும் புதுக்கோட்டை மாவட்ட கடைமடை பகுதிக்கு வழங்கினால் 10 நாட்களில் இப்பகுதியில் உள்ள 168 ஏரிகளும் நிரம்பி விடும்.

அதன்மூலம் இந்த ஆண்டாவது இப்பகுதி விவசாயிகள் சாகுபடி செய்ய முடியும். இதுகுறித்து கல்லணை கால்வாய் பாசனதாரர் விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு பொருளாளர் ஆலடிக்காடு கணேசன் கூறியதாவது: நாகுடி தலைப்புக்கு கிடைக்க வேண்டிய 300 கன அடி தண்ணீர் இந்தாண்டு கிடைக்கவில்லை. அதிகபட்சமாக 180 கனஅடி வரை தான் கிடைத்தது. இந்த நிலையில் தற்போது தஞ்சை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், கல்யாண ஓடையில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் அந்த வாய்க்காலில் சென்ற தண்ணீரையும் எங்கள் கடைமடை பகுதிக்கு முறை வைக்காமல் தொடர்ந்து 10 நாட்கள் தினசரி 300 கனஅடி வீதம் வழங்கினால் இப்பகுதியில் உள்ள ஏரிகள் நிரம்பும். இல்லாவிட்டால் 4வது ஆண்டாக இந்தாண்டும் விவசாயம் பாதிக்கப்படும் நிலை தான் உருவாகும். எனவே தமிழக அரசு, பொதுப்பணித்துறை,

மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து தினசரி 300 கனஅடி வீதம் குறைந்தது 10 நாட்களாவது தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இந்தாண்டு கொள்ளிடம் ஆற்றில் பல லட்சம் கனஅடி தண்ணீர் வீணாக கலந்தபோதும் புதுக்கோட்டை மாவட்ட கடைமடை பகுதிக்கு போதுமான தண்ணீர் கிடைக்கவில்லை. இந்த நிலையில் தற்போது புதுக்கோட்டை மாவட்ட கடைமடை பகுதிக்கு போதுமான தண்ணீர் வழங்க வாய்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அந்த தண்ணீரை பெற்றத்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: