புதுகைக்கு வந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சோதனை

புதுக்கோட்டை, அக்.11: புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வரப்பெற்ற மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சோதனை செய்யும் பணியை அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் கலெக்டர் கணேஷ் ஆய்வு செய்தார். 2019ம்ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுதேர்தலுக்காக இந்திய தேர்தல் ஆணையத்தால் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி நடந்தது.  அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் கலெக்டர் கணேஷ் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பார்வையிட்டார். அப்போது கலெக்டர் கூறியதாவது:

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வரும் பாராளுமன்ற பொதுதேர்தல்கள் 2019க்காக புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பெங்களூர் பாரத் மின்னணு நிறுவனத்திடமிருந்து வரப்பெற்றுள்ளது.  புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 3,820 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 2,080 கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் 2,080 காகித தணிக்கை கருவிகள் நேற்று முதல் முதற்கட்ட சோதனை பாரத் மின்னணு நிறுவன மின் பொறியாளர்களால் துவங்கப்பட்டுள்ளது.  மேற்காணும் கட்டுப்பாட்டு கருவியில் 5 சதவீத இயந்திரங்கள் 1,000 வாக்குகள் என்ற விகிதத்திலும் மீதமுள்ள கட்டுப்பாட்டு கருவியில் 2 சதவிகிதம் என்ற வீதத்திலும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

ஒவ்வொரு காகித தணிக்கை கருவியிலும் 96 வாக்குகள் பதிவு செய்யப்பட்டு தணிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.  மேலும், சோதனை முடிக்கப்பட்ட இயந்திரங்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு வைப்பு அறையிலேயே வைக்கப்பட உள்ளது என்றார். இந்நிகழ்ச்சியில் டிஆர்ஓ  ராமசாமி, அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: