தரமான கட்டுமான பொருட்களை கொண்டு கட்டிடங்களை கட்டத் தவறினால் ஒப்பந்ததாரர்கள் மீது கடும் நடவடிக்கை திட்ட அதிகாரி எச்சரிக்கை

சீர்காழி, அக்.11: நாகை மாவட்டத்தில் தரமான கட்டுமான பொருட்களை கொண்டு கட்டிடங்களை கட்ட தவறினால் ஒப்பந்ததாரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என  மாவட்ட திட்ட இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சீர்காழி அருகே திட்டை சின்னதம்பி நகரில் தாய் திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் செலவில்  பூங்கா, உடற்பயிற்சி மையம், கதிராமங்கலத்தில்  ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.11.20 லட்சத்தில் கொண்டத்தூர் சந்தவெளி இணைப்பு சாலை, அகணியில் எம்எல்ஏ நிதியின் கீழ் ரூ.10 லட்சத்து 30 ஆயிரம் செலவில் ஊராட்சி ஒன்றிய  தொடக்கப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சுவர் அமைக்கும் பணி, நிம்மேலியில் ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.17 லட்சத்து 64 ஆயிரத்தில் ஊராட்சி மன்ற கட்டிடம், அகணியில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்படும் 44 வீடுகள் ஆகிய  பணிகளை மாவட்ட ஊரக வளர்ச்சி துறை திட்ட இயக்குனர் சங்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்பு அவர் கூறுகையில், நாகை மாவட்டத்தில்  ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.347.26 கோடியில் அங்கன்வாடி கட்டிடம், ஊராட்சி மன்ற அலுவலகம், கல்வெர்ட் அமைத்தல், பேவர் பிளாக் சாலை அமைத்தல்,  சிறுபாலம் அமைத்தல், மரக்கன்றுகள் நடுதல், சாலை அமைத்தல், தனிநபர் உறிஞ்சிக்குழி, சமுதாய உறிஞ்சிக்குழி, சுற்றுச்சுவர், பண்ணைக்குட்டை உள்ளிட்ட 8619 பணிகள் நடைபெற்று வருகிறது. சீர்காழி தாலுகாவில் ரூ .51.23 கோடி செலவில் 497 பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளில் தரமான கட்டுமான பொருட்களை கொண்டு கட்டிட பணிகளை செய்ய தவறினால் ஒப்பந்ததாரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஞானசெல்வி, ரெஜினாராணி, பொறியாளர்கள் முத்துகுமார், தாரா, பணி மேற்பார்வையாளர்கள் சந்திரசேகரன், மோகன், ஓசைநாயகி, ஊராட்சி செயலாளர்கள் அன்பரசன்,  செந்தில் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: