2 பேர் மீதான தாக்குதலை கண்டித்து 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தர்ணா போராட்டம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பரபரப்பு

மயிலாடுதுறை, அக்.11:  108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து மயிலாடுதுறை அரசு  மருத்துவமனை முன்பாக தர்ணா போராட்டம் நடந்தது. மயிலாடுதுறை சீர்காழி, குத்தாலம், தரங்கம்பாடி போன்ற இடங்களில் விபத்தால் பாதிக்கப்பட்டவர்களை மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வருவது வாடிக்கை.  நேற்று முன்தினம் மாலை சேண்டிருப்பு பகுதியிலிருந்து விபத்தால் பாதிக்கப்பட்ட இருவரை ஏற்றிக்கொண்டு வந்தபோது அதில் குரு என்பவர் இறந்துவிட்டார். அவரது உடலை கீழே இறக்க வேண்டும் என்று உறவினர்கள் கட்டாயப்படுத்தினர். குத்தாலம் அரசு மருத்துமனையில் கொண்டுபோய் காண்பித்த பிறகு நீங்கள் வாங்கிக்கொள்ளலாம் என்று ஊழியர்கள் மறுக்கவே குருவின் உறவினர்கள் ஒன்றாக சேர்ந்து ஆம்புலன்ஸ் ஓட்டுனர் செல்வகுமார் மற்றும் உதவியாளர் செந்தில் ஆகியோரை சரமாரி தாக்கிவிட்டு குருவின் உடலை ஆம்புலன்சிலிருந்து இறக்கிவிட்டு படுகாயமடைந்த நபரை மட்டும் அனுப்பி வைத்தனர்.

காயமடைந்த நபரை மயிலாடுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பொதுமக்களால் தாக்கப்பட்ட ஆம்புலன்ஸ் டிரைவர் செல்வகுமார் மற்றும் உதவியாளர் செந்தில் ஆகியோர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.  இதுகுறித்து குத்தாலம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஊழியர்களைத்தாக்கியவர்களைக் கைதுசெய்யவேண்டும். மேலும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும் என்று கோரி அரசு  மருத்துவமனை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து சிலம்பரசன் கூறுகையில், இரவு பகல் என்று எந்த நேரத்தில் கூப்பிட்டாலும் நாங்கள் தாமதிப்பதில்லை சென்று வருகிறோம். இதில் எங்களை எந்த முகாந்திரமும் இல்லாமல் தாக்குவது என்பது வருத்தத்தை ஏற்படுத்துகிறது, காவல்துறையும் அரசும் இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் சேவையில் ஈடுபடும் எங்களை இதுபோல் புண்படுத்தவேண்டாம் என்றும் கேட்டுக்கொள்வதாக தெரிவித்தார்.

Related Stories: