வேதாரண்யம் அருகே அவுரிக்காட்டில் 8 ஆண்டுகளாக பாலப் பணி இழுத்தடிப்பு ஆற்றில் 2 கி.மீ சென்றுவரும் மாணவர்கள்

வேதாரண்யம், அக்.11: வேதாரண்யம் தாலுகா அவரிக்காடு-வண்டல் இணைப்பு பாலம் கடந்த 8 ஆண்டுகளாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. தற்போது பெய்த மழையால் ஆற்றின் குறுக்கே தண்ணீரில் 2 கி.மீ. தூரம் பள்ளி மணவர்கள் நடந்தே செல்லும் அவலநிலை தொடர்கிறது. வேதாரண்யம்  அருகே அவரிக்காடு, வண்டல், குண்டுரான்வெளி, இந்த மூன்றும்  மீனவ கிராமங்களாகும். இங்கு 1200க்கும்  மேற்பட்ட மீனவர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த 3 கிராம மக்களும் முற்றிலும் மீன்பிடி தொழிலை மட்டுமே நம்பி வாழ்கின்றனர். அவரிக்காடு-வண்டல் இடையே நல்லாறும் அடப்பாறும் உள்ளது. இந்த ஆற்றில் கோடை காலங்களில் ஆற்றின் குறுக்கே பொதுமக்களும் பள்ளி மாணவ-மாணவிகளும் நடந்து பள்ளிக்கும் தங்களுடைய மீன் வியாபாரம் செய்யவும் சென்று வருகின்றனர்.

கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு 2010ம் ஆண்டில் ரூ.14.6 கோடியில் இணைப்பு பாலம் கட்டும் பணி துவங்கப்பட்டது. கடந்த 8  ஆண்டுகளாக நடைபெற்றும் பாலப் பணி இந்த ஆண்டு முடிந்து விடும் என்று அரசுத்துறையில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் மழைக்காலம் துவங்கிய நிலையில் பால பணி இன்னும் நிறைவடைய வில்லை. இதனால் கடந்த ஒரு வாரமாக பெய்த மழையால்  ஆற்றில் தண்ணீர் பெருக்கு ஏற்பட்டு மாணவ, மாணவிகள் தண்ணீரில் நடந்து ஆற்றை தினந்தோறும் கடந்து பள்ளிக்கு சென்று வருகின்றனர். பள்ளி மாணவ, மாணவிகள் மாற்று ஆடைகளோடு வந்து ஆற்றில் இறங்கி மறுகரைக்கு வந்து ஈர ஆடைகளை மாற்றிவிட்டு பள்ளிக்கு செல்கின்றனர். நாள் தோறும் தண்ணீ–்ர் 2 கி.மீ. தூரம் தண்ணீரில் நடந்து வருவதால் விஷ பூச்சிகள் தாக்குதல் காய்ச்சல் மற்றும் பல நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது.

வண்டல் கிராமத்திலிருந்து அவரிக்காடு வந்து செல்வதற்கு ஒரே ஒரு சாலை மட்டுமே உள்ளது. வண்டலிலிருந்து அவரிகாட்டுக்கு ஆற்று வழியே வந்தால் 2 கி.மீ. தூரத்தில் வந்து விடலாம். ஆனால் சுற்று சாலை வழியாக வந்தால்  23 கி.மீ. தூரம் பயணம் செய்ய வேண்டும். இன்னும் கூடுதலாக மழை பெய்தால் அப்பகுதி மக்களும் பள்ளி மாணவர்களும் படகில்தான் செல்ல வேண்டும். கடந்த 8 ஆண்டுகளாக நடைபெறும் பாலப் பணி இந்த ஆண்டாவது முடிந்து விடும் என வண்டல் பகுதி மக்கள் நினைத்தனர்.  ஆனால் இந்த ஆண்டும் ஏமாற்றமே மிஞ்சியது. அரசு பால பணியை விரைந்து முடிக்க வேண்டும். இந்த ஆண்டு அரசு மாணவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு கருதி வண்டலில் இருந்து அவரிகாடு பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு வேன் வசதியை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: