வேதாரண்யம் அருகே சேறும் சகதியுமாக மாறிய புஷ்பவனம் கடற்கரை மீனவர்கள் கடும் அவதி

வேதாரண்யம், அக்.11: வேதாரண்யம் தாலுகா புஷ்பவனம் கடற்கரை பகுதியில் சுமார் 100 அடி தூரத்திற்கு கடற்கரையில் சேறு. சகதி  ஒதுங்கியிருப்பதால் மீனவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். புஷ்பவனம் மீனவர் கிராமத்தில்  ஐநூறுக்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சொந்தமாக நூற்றுக்கும் மேற்பட்ட பைபர் படகுகளும் இரண்டு விசைப் படகுகளும் உள்ளன. நாள்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் மீன்பிடிக்கச் செல்கின்றனர். விசைப்படகு மூலம் சுருக்கு மடி வலைகளை பயன்படுத்தி மட்லீஸ் மீன்களை பெருமளவில் பிடிக்கின்றனர். இங்கு பிடிபடும் மட்லீஸ் பெரும் பகுதி கேரளாவிற்கு நாள் தோறும் ஏற்றுமதியாகின்றன. நாள் ஒன்றுக்கு 50 டன் முதல் 500 டன் வரை இங்கிருந்து மட்லீஸ் மீன்கள் கேரளாவிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த கடற்கரையில் மட்லீஸ் மீன்கள் அதிகளவில் கிடைப்பதால் மீனவர்களுக்கு வேலைவாய்ப்பும் வருமானமும் அதிகளவில் கிடைக்கிறது.

இந்நிலையில் தற்போது கடந்த 7 நாட்களாக மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தங்கள் பைபர் படகுகளை கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். விசைப்படகை இங்கு நிறுத்த வசதி இல்லாததால் நாகையில் நிறுத்தி வைத்துள்ளனர். வேலை நிறுத்ததால் மீன்பிடிக்க செல்லாத நிலையில் தங்கள் வலைகளை பழுது பார்க்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் கடற்கரையிலிருந்து சுமார் அரை கி.மீ. தூரத்திற்கு 5 முதல் 7 அடி ஆழத்திற்கு கடற்கரை முழுவதும் சேற்றை தள்ளியுள்ளது. இதனால் மணல் பகுதியாக இருந்த கடல்பகுதி சேறும் சகதியுமாக மாறி உள்ளது. இந்த சேற்று பகுதியை கடந்து கடல் பகுதிக்கு படகை கொண்டு செல்வதற்கு குறைந்தபட்சம் 2 மணி நேரம் ஆகிறது. மீனவர்கள் ஒன்று கூடி ஒரு படகை தள்ளுவதற்கு 10 முதல் 15 ஆட்கள் ஆகிறது.

அதேபோல் பிடித்த மீன்களை சேற்று பகுதியை தாண்டி கரைக்கு கொண்டு வந்து சேர்ப்பதற்குள் மீன்கள் கெட்டுப்போய் விடுகிறது. இந்நிலை இன்னும் 2 மாதத்திற்கு நீடிக்கும் என மீனவர்கள் தெரிவித்தனர். இந்த மணல் பகுதியாக இருந்த கடற்கரை சேற்றுப்பகுதியாக மாறியதால் மீனவர்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். எனவே அரசு ஆண்டு தோறும் இந்த சிரமத்திற்கு ஆளாகும் மீனவர்களின் நலன் கருதி படகை நிறுத்துவதற்கென்று ஒரு சிறிய துறைமுகம் அமைத்து கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு ஆழமான பகுதியில் துறைமுகம் அமைத்துக் கொடுத்தால் கரையில் சேறும் தள்ளும்.  அக்டோபர், நவம்பர் மாதங்களில் தங்கள் படகுகளை அங்கு கட்டுவதற்கு வசதியாக இருக்கும் என மீனவர்கள் தெரிவித்தனர்.

Related Stories: