கரூர் மாவட்டத்தில் ஆய்வு மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சினால் நடவடிக்கை அதிகாரி எச்சரிக்கை

கரூர், அக். 11: மோட்டார் வைத்து குடிநீர்உறிஞ்சினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கரூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் குடிநீர் திட்டப்பணிகளை தமிழக அரசின் குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் முனைவர் மகேஸ்வரன் நேற்று மாவட்டம் முழுவதும் ஆய்வு செய்து பார்வையிட்டார். 85 பொறியாளர்களைக் கொண்ட 14 குழுக்கள் ஆய்வு செய்வதை பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதுூ கரூர் மாவட்டத்தில் காவிரியாற்றினை நீராதாரமாக கொண்டு 1440 குக்கிராமங்கள் பயன்பெறும் வகையில் 14 கூட்டுக்குடிநீர் திட்டங்கள் குடிநீர்வாரியம் மூலம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இக்கூட்டு குடிநீர் திட்டத்தில் கடைநிலை கிராமங்களுக்கு போதிய அளவு குடிநீர் கிடைக்கவில்லை என்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஒரு நிர்வாக பொறியாளர், 2 உதவி நிர்வாக பொறியாளர், 2 உதவி பொறியாளர் என 5 முதல் 7 பேர் கொண்ட குழுக்களை சேர்ந்த 85 பொறியாளர்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கரூர் வந்து மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களிலும் ஆய்வு செய்து வருகின்றனர்.

கூட்டுக்குடிநீர் திட்டத்தில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்து சரிசெய்ய ஆய்வு அறிக்கைகளை சமர்ப்பிக்க உள்ளனர். இதன்படி தேவையான புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாடு குடிநீர்வடிகால் வாரியம் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்படுவதற்கு முன்னர் முறையாக பரிசோதனை செய்து குடிப்பதற்கு உகந்த நீராக உள்ளதா என்பதை ஆய்வு செய்தபின்னரே வழங்கி வருகிறது. ஊரக மற்றும் நகர்ப்புறங்களில் மேல்நிலை தொட்டிகளில் இருந்து குழாய் மூலம் வழங்கப்படும் நீரை சட்டவிரோதமாகவும், முறைகேடாகவும் மோட்டார் வைத்து உறிஞ்சுவதாலும், குடியிருப்புகளுக்கு நீர்செல்லும் குழாய்களில் இருந்து முறைகேடாக இணைப்புக்கொடுத்து தனியார் தொட்டிகளில் நீர்பிடிக்கும் நிலை உள்ளதாலும் நீரானது கடைசிப்பகுதி மக்களுக்கு செல்ல இயலாத சூழ்நிலை உள்ளது.

கரூர் மாவட்டத்தில் வாரியத்தின் மூலம் குடிநீர் பெறும் 1440 குக்கிராமங்களில் 500 கிராமங்கள் முழுவதுமாக ஆய்வு செய்து முடிக்கப்பட்டுள்ளது.

இதில் 134 இணைப்புகள் சட்டவிரோதமாக இருப்பதும், 17 இணைப்புகள் முதன்மை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து தனியார் தொட்டிகளுக்கு வழங்கப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டு அவற்றின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. 24 மணி நேரத்திற்குள் இணைப்புக்களை அதன் உரிமையாளர்கள் துண்டிக்காவிட்டால் அவர்கள் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்து சட்டத்திற்குட்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு குடிநீர் இணைப்புகளை முறைகேடான வகையில் சிலர் பயன்படுத்துவதால் அனைத்து தரப்பு மக்களுக்கும் குறிப்பாக கடைநிலை மக்களுக்கு குடிநீர் சென்று சேராத நிலை உருவாகியிருப்பது ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

மக்களின் அடிப்படை வாழ்வாதாரமான குடிநீரை சட்டத்திற்கு புறம்பாக மோட்டார் மூலம் உறிஞ்சி இதுபோன்ற முறைகேடான செயல்களில் ஈடுபடுவோர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். தொடர்ந்து க.பரமத்தி, குஞ்சம்பட்டி, மலைக்கோவிலூர், சின்னகேத்தம்பட்டி, பகுதிகளில் நீர்உந்து நிலையம், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை ஆய்வு செய்தார்.

முன்னதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கலெக்டர் அன்பழகன் ஆகியோருடன் மேலாண்மை இயக்குனர் குடிநீர் விநியோகம் தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார். சென்னை இணை தலைமை பொறியாளர் (திட்டவடிவமைப்பு) சசிதரன், மேற்பார்வை பொறியாளர் பாலசுப்பிரமணியன், நிர்வாக பொறியாளர் முத்துமாணிக்கம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Stories: