கரூர் மாவட்டத்தில் மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கலெக்டர் தகவல்

கரூர், அக். 11: கரூர் மாவட்டத்தில் மது மற்றும் கள்ளச்சாராயத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன என கலெக்டர் தெரிவித்தார். குடிப்பழக்கத்திற்கு மக்கள் அடிமையாகாமல் இருக்கவும், அவ்வாறு அடிமையானவர்கள் அப்பழக்கத்தை கைவிடுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையிலும் அரசுத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் கரூரில் கலெக்டர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.  கூட்டத்தில் கலெக்டர் பேசியது:  மது அருந்துவதால் ஏற்படும் குற்றங்கள் அதிகமாக உள்ள இடங்களை கண்டறிந்து அப்பகுதியில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கலைநிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் நடத்தப்பட வேண்டும். மேலும் மதுப்பழக்கத்தினால் ஏற்படும் தீமைகள், குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மாணவ, மாணவியர் பொதுமக்கள் கலந்து கொள்ளும் பேரணி நடத்த வேண்டும். துண்டு பிரசுரங்கள், சுவரொட்டிகளை மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வினியோகிக்க வேண்டும். விளம்பர பதாகைகள் வைக்கப்பட வேண்டும்.

அரசுப்பொருட்காட்சி நடைபெற்று வரும் திருவள்ளுவர் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள அண்ணா கலையரங்கில் விழிப்புணர்வு நாடகங்கள், கலை நிகழ்ச்சிகளை நடத்தலாம். மாவட்ட மன நலத்திட்டத்தின் சார்பில் டாக்டர்கள், மனநல ஆலோசனையாளர்களைக் கொண்டு விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. ஒரு மாதத்திற்கு 5 பள்ளிகள் வீதம், மது பழக்கத்தினால் ஏற்படும் தீமைகள், வாழ்க்கையில் தன்னம்பிக்கையுடன் இருக்க தேவையான வழிவகைகள் குறித்தும் மன நல திட்டத்தின்மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி அதிலிருந்து விடுபட்டு திருந்தி வாழும் நபர்களை இத்திட்டத்தின் மூலம் ஒருங்கிணைத்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். மாணவ மாணவியருக்கு ஸ்லோகன், ஓவியம் போன்ற போட்டிகளைநடத்தலாம். வீடுகளுக்கு வழங்கப்படுகின்ற எரிவாயு உருளை, தண்ணீர் கேன்களில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஒட்டுவில்லைகளை ஒட்டலாம் என்றார். கூட்டத்தில் ஆர்டிஓக்கள் சரவணமூர்த்தி, லியாகத், ஏடிஎஸ்பி பாரதி, கலால் உதவி ஆணையர் சைபுதீன், மாவட்ட மனநல திட்ட டாக்டர் பாரதி, மனநல ஆலோசகர் மனோஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: