நீதிமன்ற தீர்ப்பை மறுசீராய்வு செய்ய அரசை வலியுறுத்துவோம் ஐயப்ப பக்தர்கள் கூட்டமைப்பு உறுதிமொழி

கரூர், அக். 11: கரூர் மாவட்ட அனைத்து ஐயப்ப பக்தர்கள் கூட்டமைப்பின் சார்பில் உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கரூர் ஐயப்ப சேவா சங்க மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு டிரஸ்ட் நிர்வாகி கனகசபாபதி தலைமை வகித்தார். இதில், கரூர் மாவட்டத்ன் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டனர். ஐயப்பன் கோயிலுக்கு பெண்களும் தரிசனம் செய்ய செல்லலாம் என்ற நீதிமன்ற தீர்ப்பினை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்த உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சியில், சபரிமலையின் புனிதத்தை காப்போம், பாரம்பரியமாக சபரிமலையில் கடைபிடித்து வரும் வழிபாட்டு முறைகளை காப்போம்.

சித்தர்களும், முனிவர்களும் வழிபடும் ஸ்தலமாகிய சபரிமலையில் கடைபிடித்து வரும் ஐதீகத்தையும், கோட்பாடுகளையும் மதித்து அவற்றை பின்பற்றுவோம். சபரிமலையில் தேவஸ்தானத்தால், தடை செய்யப்பட்ட 10 வயதுக்கு மேற்பட்ட 50வயதுக்குட்பட்ட அனைத்து பெண்களை சபரிமலைக்கு அழைத்து செல்ல மாட்டோம், அவர்களுக்கு திருமாலை அணிவிக்கவோ, இருமுடி கட்டவோ மாட்டோம், எல்லா வயது பெண்களும், சபரிமலைக்கு செல்லலாம் என்ற நீதிமன்ற தீர்ப்பை மறுசீராய்வு செய்து அனைத்து ஐயப்ப பக்தர்களின் மன வேதனைகளையும் தீர்த்திட, மத்திய, மாநில அரசுகளை தொடர்ந்து வலியுறுத்துவோம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Related Stories: