மகிழ்ச்சி, அழுகையை அடக்க தெரிந்த நம்மால் கோபத்தை ஏன் கட்டுப்படுத்த முடியாது? கரூர் உலக மனநல நாள் விழாவில் மருத்துவர் கேள்வி

கரூர், அக். 11: மகிழ்ச்சி மற்றும் அழுகையை அடக்க தெரிந்த நம்மால் கோபத்தை ஏன் கட்டுப்படுத்த முடியாது என கரூர் உலக மனநல நாள் விழாவில் மருத்துவர் கேள்வி விடுத்தார். உலக மனநல நாளை முன்னிட்டு இனாம்கரூர் கிளை நூலகம் மற்றும் மாவட்ட மனநலத்திட்டம் ஆகியவற்றின் சார்பில் உலக மனநல நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. கரூர் நகராட்சிக்குட்பட்ட இனாம்கரூர் கிளை நூலக வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கிளை நூலகர் மோகனசுந்தரம் வரவேற்றார். தொழிலபதிபர் முத்துச்சாமி தலைமை வகித்தார். பாவலர் கல்யாண சுந்தரம், ஒய்வு பெற்ற அதிகாரி சண்முகம் உட்பட பலர் கலந்து கொண்டு பேசினர். நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட மனநலத்திட்ட மனநல மருத்துவர் பாரதி கிருத்திகா கலந்து கொண்டு பேசுகையில், மனநலம், உடல் நலம், சமூக நலம் இந்த மூன்றும் சரியாக அமைந்தால்தான் ஆரோக்கியம் என கருதப்படும். எதையும் சிந்தித்து முடிவெடுத்தால்தான் அனைத்தையும் உள்வாங்கிக் கொள்ள முடியும். சிரிப்பு, கவலை போலவே உணர்ச்சியும் மனம் சார்ந்தது. மகிழ்ச்சி மற்றும் அழுகையை கட்டுப்படுத்த முடிந்த நம்மால் ஏன் கோபத்தை கட்டுப்படுத்திட முடியாது. உணர்வுகளை நாம் தான் ஆள வேண்டும்.

நம்மை உணர்வுகள் ஆளக்கூடாது. இந்த சமூகத்தில் கோபப்பட்டால்தான் சாதிக்க முடியும் என பலர் நினைப்பது தவறு. சிரிப்போ, அழுகையோ, கோபமோ இவை அனைத்தும் நம் உணர்வு சார்ந்தது. இதனை கட்டுப்படுத்திட தெரிந்து கொள்ள வேண்டும். மேலும், அனைவருக்கும் நினைவாற்றல் என்பது முக்கியம். பாசிட்டிவ்வான விஷயங்களை எப்போதும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். தற்போதைய நிலையில் இயற்கை மரணத்தை விட விபத்து போன்ற செயற்கையான மரணங்கள் தான் அதிகரித்துள்ளது. இந்த விஷயத்தில் நம் நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. இவை அனைத்துக்கும் மனநிலையும் ஒரு காரணமாக உள்ளது என கூறப்படுகிறது. எனவே நாம் அனைவரும் மனநலம், உடல் நலம் மற்றும் சமூக நலன் காக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: