சாலையோரம் குடியிருப்போருக்கு அடுக்குமாடி வீடுகள் மதுரை கலெக்டர் தகவல்

மதுரை, அக். 11: மதுரையில் சாலையோர குடியிருப்பு, ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட கலெக்டர், இவர்களுக்கு அடுக்கு மாடி வீடு வழங்கிட அதிரடி உத்தரவிட்டார்.மதுரை வைகை கரையோரமுள்ள ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றுவது தொடர்பாக கலெக்டர் நடராஜன், ஆலோசனை நடத்தினார். இதில் மாநகராட்சி அதிகாரிகள், வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை மற்றும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது கலெக்டர் நடராஜன் பேசுகையில்,

‘‘மதுரை மாநகராட்சி எல்கைக்குட்பட்ட அரசுக்கு சொந்தமான ஆட்சேபகரமான நீர்நிலை பகுதிகள், ரயில்வே தண்டவாளப் பகுதிகள், சாலையோரங்களில் ஆக்கிரமிப்பு செய்து குடியிருப்பவர்களை ஐகோர்ட் உத்தரவுப்படி மறுகுடியமர்வு செய்யப்பட வேண்டும். மதுரை மீனாட்சிபுரம் (ஓடக்கரை), கண்மாய் மேலத்தெரு, தேவர்நகர், நேதாஜிநகர், ஜட்காதோப்பு, சின்னகண்மாய், சிந்தாமணி ரோடு ஆகிய பகுதியில் அரசு நிலத்தில் ஆக்கிரமிப்பில் உள்ளவர்களை மறுகுடியமர்வு செய்யப்பட உள்ளனர்.

இவர்களுக்கு மத்திய, மாநில அரசின் மானியம் மற்றும் பயனாளியின் பங்களிப்புடன் ராஜாக்கூர் பெரியார் நகரில் 5.08.43 ஹெக்டேர் பரப்பளவில் 1,088 அடுக்குமாடி குடியிருப்புகள் ரூ.89 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. ஒரு குடியிருப்பின் கட்டுமானத்தொகை ரூ.8 லட்சத்து 25 ஆயிரம் ஆகும். இதில் மத்திய அரசின் மானியம் ரூ.1.50 லட்சம், மாநில அரசின் மானியம் ரூ.5 லட்சம், பயனாளியின் பங்களிப்புத்தொகை ரூ.1.75 லட்சம் ஆகும். இங்குள்ள வீடுகள் அடிப்படை வசதிகளுடன், தார்சாலைகள், மழைநீர்சேகரிப்பு, வடிகால், குடிநீர், தெருவிளக்குகள், சுத்திகரிப்பு கட்டமைப்பு, சாலையோர மரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

ரேஷன்கடை, நூலகம், கடைகள், மழலையர் பள்ளி, பூங்கா, சமுதாயக்கூடம் ஆகியவை உள்ளன. எனவே ஆக்கிரமிப்பில் உள்ள வைகை வடகரை ஆழ்வார்புரம், மீனாட்சிபுரம் ஓடக்கரை, ஜட்கா தோப்பு மற்றும் நேதாஜி நகர் ஆகிய ஆக்கிரமிப்புப் பகுதிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து இப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற வேண்டும். அவர்களை ராஜக்கூர் பகுதியில் உள்ள குடிசைமாற்று வாரிய குடியிருப்பு வீடுகளில் குடியேற்ற வேண்டும்’’ என்றார்.

Related Stories: