நீர்வரத்து துவங்கியதால் ‘குளித்து குதூ....கலிக்கலாம் வாங்க குட்லாடம்பட்டிக்கு’ பெண்களுக்கு தனி இடம்; உடை மாற்றும் அறை பிளாஸ்டிக், மது, உணவு பொருட்களுக்கு தடை

வாடிப்பட்டி, அக். 11: வாடிப்பட்டி மற்றும் சுற்றுப் பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழையால் பலமாதங்களாக வறண்டு கிடந்த குட்லாடம்பட்டி நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து துவங்கியுள்ளது.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது தாடகை நாச்சியம்மன் நீர்வீழ்ச்சி. சிறுமலை பகுதியில் அமைந்துள்ள இந்த அருவி சுற்றுலா பயணிகளால் மதுரையின் குற்றாலம் என்றழைக்கப்படுகிறது. மேலும் மூலிகை குணம் வாய்ந்ததாக கருதப்படும் இந்த அருவி கடந்த சில மாதங்களாக இப்பகுதியில் போதிய மழையில்லாததால் முற்றிலும் வறண்டு வெறும் பாறைகளாக காட்சியளித்தது. அருவி பகுதி வனத்துறை கட்டுப்பாட்டில் இருப்பதால் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் கடந்த சில தினங்களாக வாடிப்பட்டி பகுதியில் அவ்வப்போது பெய்து வரும் தொடர்மழையால் வறண்டு கிடந்த அருவியில் நீர்வரத்து துவங்கியுள்ளது. அதனை தொடர்ந்து நேற்று முதல் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து குட்லாடம்பட்டி கிராமத்தை சேர்ந்த பாலாஜி கூறுகையில், ‘பலமாதங்களுக்குப் பின் அருவியில் நீர் வருவது மகிழ்ச்சியாக உள்ளது. அதேநேரம் அருவிக்கு செல்லும் சாலை மோசமாக உள்ளது. அதனை சீரமைத்து தருவதோடு கூடுதல் பேருந்து வசதியும் செய்து தரவேண்டும்’ என்றார்.

Related Stories: