40 நாட்களில் 23 சம்பவங்கள் மதுரை மாவட்டத்தில் 337 பவுன் நகை கொள்ளை

மதுரை, அக். 11: மதுரை மாவட்டத்தில் கடந்த 40 நாட்களில் வழிப்பறி, கொள்ளை என 23 சம்பவங்களில் 337 பவுன் நகைகள் கொள்ளை போனதால் பொதுமக்கள் பெரும் பீதியில் உள்ளனர்.மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதியில் வழிப்பறி, திருட்டு, கொள்ளை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குற்றங்களை தடுக்க தனிப்படை அமைக்கப்பட்டும் சம்பவங்களை தடுக்க முடியவில்லை. கடந்த செப்.1ம் தேதி முதல் அக்.10ம் தேதி வரை 40 நாட்களில் குருசாமி மனைவி வள்ளியிடம் 15 பவுன் நகை வழிப்பறி.

சென்னையை சேர்ந்த தெய்வானை என்பவர் மதுரை காமராஜர் சாலையில் உள்ள உறவினர் வீட்டில் ஜன்னல் ஓரத்தில் வைத்திருந்த 18 பவுன் நகை கொள்ளை, ஒத்தக்கடையில் அடுத்தடுத்து 3 வீடுகளில் 42 பவுன் நகை கொள்ளை, கரிமேடு பகுதியைச் சேர்ந்த சங்கரன் வீட்டை உடைத்து 15 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் ரொக்கம், 15 கிலோ வெள்ளி கொள்ளை நடந்துள்ளது.

மேலும், கிருஷ்ணாபுரம் நகை கடை அதிபரிடம் ரூ.6 லட்சம் கொள்ளை உள்ளிட்ட கடந்த 40 நாட்களில் 23 சம்பவங்களில் 337 பவுன் நகைகள் கொள்ளை போனது. இது மதுரை மக்களிடம் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொள்ளை சம்பவங்களை தடுக்க போலீசார் நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, ‘‘கடந்த மாதத்தில் இருந்து அதிகமான வழிப்பறி, திருட்டு, கொள்ளை சம்பவங்கள் மாவட்டத்தில் அரங்கேறி உள்ளது. அதிகமாக வீடுகளை உடைத்து கொள்ளை நடந்துள்ளது. 40 நாட்களில் 23 சம்பவங்களில் 337 பவுன் நகைகளை பொதுமக்கள் இழந்துள்ளனர். வார்டுகள் தோறும் எஸ்ஐகள் தலைமையில் போறுப்பாளர்கள் நியமனம், ரோந்து பணிகள் இருந்தும் கொள்ளை சம்பவங்கள் குறையவில்லை. வீதிகள் தோறும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். 24 மணி நேரமும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்’’ என்றனர்.

Related Stories: