பாலம் கட்ட மக்கள் கோரிக்கை

திருப்பூர், அக்.7: திருப்பூர் வாய்க்கால் மேடு பகுதியில் பாலம் அமைக்காததால் நகர் பகுதிக்கு செல்லும் மக்கள் நொய்யல் ஆற்றில் இறங்கி கடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. திருப்பூர் வாய்க்கால் மேடு பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி மக்கள் நொய்யல் ஆற்றை கடந்து சென்றால்தான் நகர் பகுதிக்கு செல்ல முடியும்.  இந்நிலையில், நொய்யல் ஆற்றில் தொடர் நீரோட்டம் இல்லாததால் நொய்யல் ஆற்றை கடந்து நகர் பகுதிக்கு சென்று வருகின்றனர்.கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் நொய்யல் ஆற்றில் அதிகளவு தண்ணீர் ஓடுகிறது. வாய்க்கால் பகுதி பொதுமக்கள் நொய்யல் ஆற்றை கடக்க ஆற்றில் இறங்கி நடந்து செல்கின்றனர். இவர்கள் நடந்து செல்லும் போது திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் உயிர் சேதம் ஏற்படும். ஆகவே, வாய்க்கால் மேடு பகுதியில் புதிய பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: