7 பேரை விடுதலை செய்யக்கோரி ஈரோட்டிலிருந்து கவர்னருக்கு 10 ஆயிரம் அஞ்சல் அட்டைகள்

ஈரோடு, அக். 7: ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்யக்கோரி ஈரோட்டில் இருந்து கவர்னருக்கு 10 ஆயிரம் அஞ்சல் அட்டை நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன்,நளினி,முருகன்,சாந்தன்,ரவிச்சந்திரன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்யக்கோரி தமிழக அமைச்சரவை சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தமிழக கவர்னருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் அனுப்பி வைக்கப்பட்டது.

 ஆனால், கவர்னர் இது தொடர்பாக எவ்வித மேல் நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளதையடுத்து 7 பேரையும் விடுதலை செய்யக்கோரி கவர்னருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் இயக்கம் ஈரோட்டில் நேற்று தொடங்கப்பட்டது. மக்கள் சிவில் உரிமைக்கழகம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் திமுக மாநகர செயலாளர் சுப்பிரமணியம், மாநில கொள்கை பரப்பு இணை செயலாளர் சந்திரகுமார், பகுதி கழக செயலாளர் நடராஜன், இலக்கிய அணி துணை அமைப்பாளர் வீரமணிஜெயக்குமார், மதிமுக மாநில பொருளாளர் கணேசமூர்த்தி, பியுசிஎல் மாநில தலைவர் கண.குறிஞ்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் விநாயகமூர்த்தி, சிபிஐ மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு, சிபிஎம் ரகுராமன், திராவிடர் கழகம் மாநில அமைப்பு செயலாளர் சண்முகம், திராவிடர் விடுதலை கழகம் தலைவர் கொளத்தூர்மணி, விவசாய சங்க நிர்வாகிகள் பொன்னையன், அறச்சலூர் செல்வம், வடிவேல், துளசிமணி, தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்ட செயலாளர் குமரகுருபரன், நாம் தமிழர் கட்சி மேற்கு தொகுதி செயலாளர் தமிழ்செல்வன், ஆதித்தமிழர் பேரவை நிறுவன தலைவர் அதியமான், ஈரோடை அமைப்பு தலைவர் நிலவன், முமுக மாவட்ட தலைவர் சித்திக் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட அமைப்புகளை சேர்ந்தவர்கள் திரளாக கலந்து கொண்டு ஈரோடு தலைமை தபால் நிலையத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அஞ்சல் அட்டைகளை கவர்னருக்கு அனுப்பி வைத்தனர்.  ஈரோட்டில் தொடங்கப்பட்டுள்ள அஞ்சல் அட்டை அனுப்பும் இயக்கத்தை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிர்வாகிகள் கூறினர்.

Related Stories: