வறட்சி நீங்கியதால் கீழ்பவானி 2ம் மண்டல விவசாயிகள் மகிழ்ச்சி

ஈரோடு,  அக். 7: ஈரோட்டில் பரவலாக பெய்து வரும் மழையால் வறட்சி நீங்கியுள்ளது.  இதனால் கீழ்பவானி 2ம் மண்டல விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

 பவானிசாகர்  அணையில் இருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் கீழ்பவானி வாய்க்காலில் ஒற்றைப்படை  மதகுகளுக்கும், சென்னசமுத்திரம் கிளை வாய்க்காலில் இரட்டை படை  மதகுகளுக்கும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனிடையே கீழ்பவானி 2ம்  மண்டலத்திற்குட்பட்ட இரட்டைப்படை மதகுகள் பாசன பகுதியில் வறட்சி நிலவுவதால்  15 நாட்களுக்கு  உயிர் தண்ணீர் வழங்கும் படி விவசாயிகள் கோரிக்கை விடுத்து  வந்தனர்.

 கடந்த ஆகஸ்ட் மாதம் பவானிசாகர் அணை நிரம்பி உபரி நீர் 16  டிஎம்சி வரை வீணாக கடலுக்கு திறந்துவிடப்பட்ட நிலையில் கூட 2ம்  மண்டலத்திற்கு உயிர் தண்ணீர் திறக்க பொதுப்பணித்துறையினர் முன்வராததால்  விவசாயிகள் கடும் அதிருப்தியில் இருந்து வந்தனர்.  இந்நிலையில் ஈரோடு  மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக பெய்து வரும் மழையின் காரணமாக 2ம்  மண்டல பகுதிகளில் வறட்சி நீங்கி உள்ளதால் விவசாயிகள்  மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதே போல மானாவாரி நிலங்களில் புரட்டாசி மாதத்தில்  சோளம் விதைப்பது வழக்கமாகும். ஆனால் கடந்த ஆண்டுகளில் சரிவர மழை இல்லாததால்  சோளம் விதைப்பது தடைபட்டு வந்தது. இந்தாண்டு பரவலாக மழை பெய்துள்ளதால்  சோளம் விதைப்பதற்கான பணிகளில் தீவிரம் காட்டி வருவதாக மானாவாரி விவசாயிகள்  தெரிவித்துள்ளனர்.

Related Stories: