மொமோ சேலன்ஞ் கேம் விளையாடுவதை தவிர்க்க பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்: தலைமை ஆசிரியர்களுக்கு தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு

வேலூர், அக்.11: மொமோ சேலன்ஞ் கேம் விளையாடுவதை தவிர்க்க பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தொடக்கக்கல்வி இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: மொமோ சேலன்ஸ் என்ற அபாயகரமான இணையதள விளையாட்டை செல்போனில் குழந்தைகள் விளையாடுகின்றனர். இதனால் அவர்கள் மிக விபரீதமான முடிவுகளுக்கு ஆளாக நேரிடுகிறது. எனவே இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைத்து பள்ளிகளுக்கும் உரிய முன்னெச்சரிக்கை மற்றும் தக்க அறிவுரை வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த விளையாட்டு தொடர்பான விவரங்களை பள்ளி மாணவர்களுக்கு உரிய முறையில் எடுத்துச் சொல்லி இத்தகைய விளையாட்டை எக்காரணம் கொண்டும் விளையாடக் கூடாது. அறிமுகம் இல்லாத எண்களிலிருந்து வரும் அழைப்புகளை ஏற்க வேண்டாம். அந்த எண்களை செல்போனில் தொடர்பு பட்டியலில் சேர்க்கக் கூடாது என்று திட்டவட்டமாக அறிவுறுத்த வேண்டும். இதுதொடர்பாக அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கையாக அனுப்ப முதன்மை கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: