சிறையில் இருந்து ஜாமீனில் வந்தபோது பயங்கரம் நாட்டு வெடிகுண்டு வீசி ரவுடியை கொல்ல முயற்சி: வேலூரில் பரபரப்பு

வேலூர், அக்.11: வேலூர் மத்திய சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த பிரபல ரவுடியை நாட்டு வெடிகுண்டு வீசி கொல்ல முயன்ற சம்பவம் வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்தவர் வீச்சு தினேஷ்(32), பிரபல ரவுடி. இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்டோ டிரைவரை கொலை செய்து, சடலத்தை பாலாற்றில் புதைத்துள்ளார். பின்னர் கூட்டாளிகளுடன் ஊர்வலமாக நடந்து சென்று வேலூர் வடக்கு போலீசில் சரணடைந்தார். இச்சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட வீச்சு தினேஷ், ஜாமீனில் வெளியே வந்தார். அதன்பிறகு ஆள் கடத்தல், வழிப்பறி போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து போலீசார், மீண்டும் அவரை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், நேற்று காலை 10 மணியளவில் வீச்சு தினேஷ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து சிறையில் இருந்து ெவளியே வந்த அவர், அங்கிருந்து கார் மூலம் தனது வீட்டிற்கு புறப்பட்டு சென்றார். காரில் அவரது கூட்டாளிகள் சந்துரு, வரதன் ஆகியோர் உடன் சென்றனர். மத்திய சிறையில் இருந்து கார் தொரப்பாடி எம்ஜிஆர் சிலையை கடந்து சென்றபோது அங்குள்ள சிறிய சந்தில் மறைந்திருந்த 6 பேர் கும்பல் 3 பைக்குகளில் கத்தி, வீச்சரிவாள் ஆகியவற்றுடன் காரை சுற்றி வளைத்து கார் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். குண்டு வெடித்து சிதறியதில் காரின் முன்பக்கம் லேசாக சேதமடைந்தது. காரில் வந்தவர்கள் காயம் ஏதுமின்றி தப்பினர்.

எப்போதும் போக்குவரத்தும், பாதுகாப்பும் மிகுந்த இந்த சாலையில் காரை சுற்றி வளைத்து நாட்டு வெடிகுண்டு வீசி ரவுடியை கொலை செய்ய முயன்ற சம்பவம் அங்கு பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது. நாட்டு வெடிகுண்டு வெடித்த சத்தம் கேட்டதுடன், திடீரென வீச்சரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் கும்பலை கண்டதும் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இந்த சம்பவம் குறித்து அறிந்த பாகாயம் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அதற்குள் நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டதாலும், பயங்கர ஆயுதங்களுடன் கும்பல் சுற்றி வளைத்ததாலும் அதிர்ச்சியடைந்த ரவுடி வீச்சு தினேஷ், காரை நிறுத்தாமல் அங்கிருந்து தெற்கு காவல் நிலையம் வந்தார்.

அங்கு தனது காரை நிறுத்தி விட்டு, உடனடியாக போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்த அவர் அங்கு நடந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் தெரிவித்தார். தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். அத்துடன் தொரப்பாடி எம்ஜிஆர் சிலை அருகே சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரவுடி வீச்சு தினேஷ் மீது கொலை முயற்சியில் ஈடுபட்ட மர்ம கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.

யார் பெரிய ரவுடி என்ற மோதலில் கொலை முயற்சி?

வேலூரில் முக்கிய ரவுடிகளான வசூர் ராஜா, ரவுடி ஜானி மற்றும் வீச்சு தினேஷ் ஆகியோர் இடையே யார் பெரியவர் என்ற போட்டி உள்ளது. இந்த போட்டி காரணமாக இந்த கொலை முயற்சி நடந்திருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுதவிர கடந்த சில வாரங்களுக்கு முன்பு பாலாற்றில் கொலை செய்யப்பட்ட பிச்சைபெருமாளை வீச்சு தினேஷின் கூட்டாளிகள் கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் வீச்சு தினேஷை பழிக்குப்பழி வாங்க பிச்சைபெருமாளின் கூட்டாளிகள் இந்த கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வசூர் ராஜா திருச்சி சிறைக்கு மாற்றம் வேலூரில் ரவுடி வீச்சு தினேஷ் மீது நடந்த தாக்குதல் எதிரொலியாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரவுடி வசூர் ராஜாவை பாதுகாப்பு காரணங்களுக்காக திருச்சி மத்திய சிறைக்கு மாற்றி வேலூர் சிறை நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பாக விசாரித்தபோது வேலூர் சிறையில் வீச்சு தினேஷ், வசூர் ராஜா ஆகியோரிடையே மோதல் ஏற்பட்டதாகவும், அதனால் இந்த மாற்றம் நடந்திருக்கலாம் என்றும் சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories: