தேவாலயம் பழுது பார்த்தல், சீரமைத்தல் பணிக்கு அரசு நிதி விண்ணப்பிக்க அழைப்பு

புதுக்கோட்டை, அக்.10:  புதுக்கோட்டை கலெக்டர் கணேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு அரசு நிதி உதவி வழங்கும் திட்டம் 2016-17ம் ஆண்டு முதல் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு அந்த கிறிஸ்தவ தேவாலயம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த கட்டடத்தில் இயங்கி இருத்தல் வேண்டும். தேவாலயம் கட்டப்பட்ட இடம் பதிவுத்துறையில் பதிவு செய்திருக்க வேண்டும், தேவாலயமும் பதிவு செய்திருக்க வேண்டும். தேவாலயத்தினை சீரமைப்பு பணிக்காக வெளிநாட்டிலிருந்து எவ்வித நிதி உதவியும் பெற்றிருக்க கூடாது. சீரமைப்பு பணிக்காக ஒரு முறை நிதி உதவி அளிக்கப்பட்ட தேவாலயத்திற்கு மறுமுறை நிதி உதவி 5 ஆண்டுகளுக்கு பின்னர் வழங்கப்படும்.

விண்ணப்ப படிவத்தை பிற்சேர்க்கை 3ல் உள்ளவாறு சான்றிதழ் மற்றும் அனைத்து உரிய ஆவணங்களுடன் புதுக்கோட்டை  கலெக்டருக்கு வருகிற 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பபடிவம் மற்றும் சான்றிதழ் இணையதள முகவரியில் www.bcmbcmw@tn.gov.in வெளியிடப்பட்டு உள்ளது. 10 முதல் 15 ஆண்டுகள் வரையிலான தேவாலயங்களுக்கு ரூ.1 லட்சமும், 15 முதல் 20 ஆண்டுகள் வரையிலான தேவாலயங்களுக்கு ரூ.2 லட்சமும், 20 ஆண்டுகளுக்கு மேல் உள்ள தேவாலயங்களுக்கு ரூ.3 லட்சமும் பழுது பார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகளுக்கு அரசின் நிதி உதவி வழங்கப்படுகிறது. நிதி உதவி இரு தவணைகளாக தேவாலயத்தின் வங்கி கணக்கில் மின்னணு பரிவர்த்தனை மூலம் செலுத்தப்படும். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தகுதியான கிறிஸ்தவ தேவாலயங்கள் உரிய காலத்திற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

Related Stories: