மனுதாரர்கள் வசதிக்காக பெரம்பலூர் நீதிமன்ற வளாகத்தில் தொடுதிரை கணினி வசதி இன்று துவக்கம்

பெரம்பலூர்,அக்.10: பெரம்பலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் முதல் முறையாக மனுதாரர்கள், வழக்கறிஞர்கள், பொதுமக்கள் வசதிக்காக இலவச தொடுதிரை கணினி வசதியை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பாலராஜமாணிக்கம் இன்று (10ம்தேதி) திறந்து வைக்கிறார். வழக்கமாக ரயில்வேநிலையம், வங்கிகளில் உள்ளதுபோல், பெரம்பலூர் மாவட்டத்தில் முதன்முறையாக ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மனுதாரர்கள், வழக்கறிஞர்கள், பொதுமக்கள் வசதிக்காக இலவச தொடுதிரை கணினி வசதி அமைக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்புற தரைதளத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த தொடுதிரை கணினி வசதியை இலவசமாக பயன்படுத்தி, வழக்கு விஷயமாக நீதிமன்றங்களுக்கு வருகைதரும் மனுதாரர்கள், வழக்கறிஞர்கள், சாட்சிகளாக வருகிற, ஆதரவு தரப்பினராக வருகிற பொதுமக்கள், தாங்கள் சம்மந்தப்பட்ட, தாங்கள் அறிய வேண்டிய வழக்குகளின் நிலமை, வாய்தா தேதி போன்றவற்றை அன்றன்றைக்கு உடனுக்குடன் தொடுதிரை கணினி வசதியை முழுமையாக பயன்படுத்தி அறிந்து கொள்ளலாம். பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், மாவட்ட மகிளா நீதிமன்றம்,

தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம், சார்பு நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், நீதித்துறை நடுவர் நீதிமன்றம், கூடுதல் மகிளா நீதிமன்றம், நிலஅபகரிப்பு நீதிமன்றம் ஆகிய 8 நீதிமன்றங்கள் உள்ளடங்கியள்ளன. இவைகளின் அன்றாட நடைமுறைகள் பதிவேற்றம் செய்யப்படும்.

இந்த தொடுதிரை கணினி வசதியை பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பாலராஜமாணிக்கம் இன்று (10ம் தேதி) மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கிறார். நிகழ்ச்சியில் நீதிபதிகள் விஜயகாந்த், முரளிதரன். வினோதா, கருப்பசாமி, அசோக் பிரஷாத், மோகனப்பிரியா ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர்கள் வள்ளுவன்நம்பி, முகமதுஇலியாஸ், நீதிமன்றமேலாளர் தனலட்சுமி,  மாவட்டமுதன்மை அமர்வுநீதிபதியின் நேர்முக உதவியாளர் விஜயகுமாரி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு நிர்வாக அலுவலர் வெள்ளைச்சாமி, கணினி அலுவலர் ஜேசு பால்ராஜ் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

Related Stories: