சதுப்பேரி ஆக்கிரமிப்புகளுக்கு வருவாய்த்துறையினரே காரணம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் குற்றச்சாட்டு

வேலூர், அக்.10: வேலூரில் லாரி ஷெட், குடியிருப்புகளாக மாறிப்போன சதுப்பேரி ஆக்கிரமிப்புகளுக்கு வருவாய்த்துறையினரே காரணம் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர். தமிழகத்தில் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் இருந்தால் கருணை காட்டாமல் உடனடியாக அகற்ற வேண்டும். பட்டா வழங்கப்பட்டு இருந்தாலும் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

வேலூர் மாவட்டத்தில் ஏரி, குளங்கள், நீர்வரத்து கால்வாய்கள் என்று நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. வேலூர் மக்களின் நிலத்தடி நீராதாரமான சதுப்பேரி 621 ஹெக்டர் பரப்பளவு கொண்டது. அப்துல்லாபுரம் முதல் கொணவட்டம் வரை அகலமும், கொணவட்டம் தொடங்கி தொரப்பாடி வரை நீளமும் கொண்டது.

வேலூர் நீராதாரமான சதுப்பேரி 30 ஆண்டுகளுக்கு முன்பு முள்ளிப்பாளையம் வரை சென்ற கால்வாய், ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி குடியிருப்புகளானது. அதேபோல் முள்ளிப்பாளையம் ஏரியும் திடீர் நகர் குடியிருப்பு பகுதியானது. தொரப்பாடி ஏரியில் இருந்து சதுப்பேரிக்கு வரும் இணைப்புக்கால்வாயும் காணாமல் போனது. இப்படி சதுப்பேரி ஆக்கிரமிப்பின் பிடியில் சுருங்கி வருகிறது. இதில் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு வருவாய்த்துறையினர் பட்டா வழங்கியிருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதோடு மாநகராட்சியும் அங்கு பொது சுகாதார வளாகத்தை கட்டியுள்ளது. இவ்வாறு வேலூர் சதுப்பேரியில் ஏறத்தாழ 200 ஏக்கர் பரப்பளவுக்கும் மேல் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளதாக ெதரிகிறது.

இதற்கிடையில், கடந்த மாதம் கலெக்டர் ராமன் சதுப்பேரியில் விநாயகர் சிலைகள் கரைக்கும் இடத்தை ஆய்வு செய்தார். அப்போது சதுப்பேரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆர்டிஓ மெக்ராஜ் தலைமையிலான அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதுகுறித்து ஆர்டிஓ மெக்ராஜிடம் கடந்த மாதம் கேட்டபோது, ‘சதுப்பேரி ஆக்கிரமிப்புகள் அகற்றுவது குறித்து அறிக்கை தயாராகி வருகிறது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலுவலக பணியின் காரணமாக சென்னை சென்றுள்ளனர். அவர்கள் வந்ததும் முழுமையாக அறிக்கை தயாரிக்கப்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு சிலர் பட்டா வாங்கியுள்ளனர். இதுகுறித்தும் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

இந்நிலையில் சதுப்பேரி ஆக்கிரமிப்புகள் அகற்றும் நடவடிக்கை குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘சதுப்பேரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய்துறையினர் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். வருவாய்துறையினர்தான் சதுப்பேரியில் உள்ள கட்டிடங்களுக்கு பட்டா வழங்கியுள்ளனர்’ என்று குற்றம்சாட்டுகின்றனர்’. எனவே கலெக்டர் ராமன், சதுப்பேரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகளை ஒருங்கிணைத்து உரிய நடவடிக்கை எடுத்து வேலூர் மக்களின் நீராதாரமாக விளங்கும் சதுப்பேரியை பாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: