ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தடுத்து நிறுத்துவோம்

திருப்பூர், அக்.5: எதிர்ப்பையும் மீறி ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தினால், விவசாயிகளை திரட்டி தடுத்து நிறுத்துவோம் என தமிழ்நாடு விவசாய சங்க மாநில பொதுசெயலாளர் சண்முகம் தெரிவித்தார்.

 இதுகுறித்து திருப்பூரில் அவர் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:  நாடு முழுவதும் 55 வட்டாரங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது.அதில், தமிழகத்தில் மூன்று வட்டாரங்களில் இந்த திட்டம் வருகிறது. தமிழகத்தில் குன்னஞ்சாவடி முதல் வைத்தீஸ்வரன் கோவில் வரை உள்ள சமவெளி பகுதி ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கும், மரக்காணம் முதல் கடலூர் வரையிலும், பரங்கிப்பேட்டை முதல் வேளாங்கண்ணி வரை வேதாந்தா நிறுவனத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது.

 ஹைட்ரோ கார்பன் எடுப்பது சம்பந்தமாக இதுவரை  முதல்வர் பழனிசாமி வாய் திறக்கவில்லை. மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களுக்கு டெல்டா மாவட்டங்களில் அனைத்து தரப்பினரும் போராடிக்கொண்டிருக்கும் நிலையில் தமிழக முதலமைச்சர் மவுனம் காப்பது சரியல்ல. எனவே அவர் உடனடியாக ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு தமிழக அரசின் நிலைபாடு என்ன என்பதை விளக்க வேண்டும்.   அதுமட்டுமல்லாமல் ஹைட்ரோ கார்பன் எடுக்க  அரசு தடைவிதித்து அரசாணை வெளியிட வேண்டும்.  மத்திய அரசு ஒப்பந்தம் செய்திருந்தாலும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கக் கூடாது. இந்த கோரிக்கைகளை வைத்து சிதம்பரம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை போன்ற மாவட்டங்களில் வரும் 9ம் தேதி வட்டாச்சியர் அலுவலகம் முன்பு அனைத்து விவசாய சங்கம் மற்றும் மீனவ பிரதிநிதிகளின் சார்பில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். அந்த எதிர்பையும் மீறி ஹைட்ரோ கார்பன் எடுத்தால் அதனை தடுத்து நிறுத்துவோம்.  இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: