ஜாக்டோ-ஜியோ போராட்டம்

கோவை, அக். 5: கோவை மாவட்டத்தில் ஜாக்டோ ஜியோ சார்பில் நேற்று நடந்த போராட்டத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். கோவை கலெக்டர் அலுவலகம் முன் 200க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய், 21 மாத ஊதிய குழு நிலுவை தொகையை வழங்க வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். சிறப்பு கால முறை ஊதியம், மதிப்பூதிய, தொகுப்பூதியம் முறையை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டம் காரணமாக அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும், பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர்கள் இல்லாத காரணத்தினால் சிறப்பாசிரியர்கள் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டது.

ஆசிரியர்கள் பற்றாக்குறை காரணமாக பெரும்பாலான பள்ளிகளில் ஒரே வகுப்பில் 4 பிரிவுகளை சேர்ந்த மாணவர்களை வைத்து பாடங்கள் நடத்தினர். விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஜாக்டோ-ஜியோ கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார்  கூறியதாவது: கோவை மாவட்டத்தில் அரசு ஊழியர்கள், அரசு உயர்நிலை, மேல்நிலைபள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் என 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை தொடர்ந்து வரும் 13ம் தேதி சேலத்தில் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு நடக்கிறது. எங்களது கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்காவிட்டால் நவம்பர் 27ம் தேதி முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் பஸ்நிலையம் முன்பு நேற்று நடந்த  ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர்சங்க செந்தில்குமார் தலைமை தாங்கினார்.தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் மகேஷ்குமார்,தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கனகராஜ், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக ஜாஸ்மின். வட்டாரசெயலாளர் ராதாகிருஷ்ணன். தலைமையாசிரியர் சங்க மாநில பொறுப்பாளர் தாமோதரன். ஆசிரியர்கள் மணிமலர், தண்டபாணி ,நாகராஜ்,அசோக்குமார், நாகராஜன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.  

ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து கலந்து கொண்டனர்.

Related Stories: