வெள்ள பாதிப்புகளை தடுக்க ‘ரெட் அலர்ட்’

கோவை, அக்.5:  கோவை மாவட்டத்தில் மழை வெள்ளம், நோய் பாதிப்புள்ள பகுதிகளில் ‘ரெட் அலர்ட்’ திட்டத்தை செயல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் பருவ மழை தீவிரமாகியுள்ளது. பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சி முகமை கட்டுபாட்டில் 1000க்கும் மேற்பட்ட கசிவு நீர் குட்டை, சிறு தடுப்பணைகள் உள்ளது. மழை நீர் முழுவதும் குளம், குட்டைகளில் சேர்க்கும் வகையில் வாய்க்கால் சீரமைக்க, நீர் வழிப்பாதை அடைப்புகளை சரி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.   கோவை மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதியில் சிறுவாணி, பில்லூர் 1 மற்றும் 2, பவானி, ஆழியாறு குடிநீர் திட்டங்கள் பயன்பாட்டில் இருக்கிறது. சிறுவாணி, பில்லூர், பவானி குடிநீர் திட்ட குழாய் பல இடங்களில் பழுதடைந்த நிலையில் இருக்கிறது. குடிநீரில் சாக்கடை கலப்பதை தடுக்க, குழாய் மாற்றும் பணி நடத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

குடிநீர் தொட்டிகளில் குளோரின் பவுடர் கலப்பதை இரு மடங்கு அதிகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உள்ளாட்சி நிர்வாகத்தினர் பொதுமக்கள் வீடுகளில் உள்ள நிலத்தடி நீர் மட்ட தொட்டிகள் மற்றும் நீர் சேகரிப்பு தொட்டிகளில் அபேட் என்ற கொசு புழு அழிப்பு மருந்தை தெளிக்கவேண்டும். குடிநீரில் கழிவு நீர் கலப்பு இருக்கிறதா என கண்டறிந்து அவற்றை சரி செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கினால் உடனடியாக அகற்றவேண்டும். மழையால் டெங்கு, சிக்குன் குனியா, மலேரியா, டைபாய்டு காய்ச்சல் பரவாமல் தடுக்க சுகாதார துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவேண்டும்.   மழை வெள்ள பாதிப்பு, நோய் பாதிப்புள்ள பகுதிகளில் ரெட் அலர்ட் என்ற அபாய அறிவிப்பை வெளியிட்டு பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories: