டிசம்பர் மாதம் முதல் ரயில் போக்குவரத்து தொடங்கப்படும் சென்னை கோட்ட மேலாளர் தகவல் சென்னை, காஞ்சிபுரம், அரக்கோணம் வழியாக சர்க்கிள் பாதையில்

அரக்கோணம், அக்.5: சென்னை, காஞ்சிபுரம். அரக்கோணம் வழியாக சர்க்கிள் ரயில்வே பாதையில் டிசம்பர் மாதம் முதல் ரயில் போக்குவரத்து தொடங்கப்படும் என்று சென்னை கோட்ட மேலாளர் தெரிவித்தார். வேலூர் மாவட்டம், அரக்கோணம் அடுத்த மேல்பக்கம் பகுதியில் நேற்றுமுன்தினம் கார்கள் ஏற்றி செல்லும் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதுபோன்ற அப்பகுதியில் அடிக்கடி தடம்புரளும் விபத்துக்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்நிலையில், தெற்கு ரயில்வே சென்னை கோட்ட மேலாளர் நவீன் குலாத்தி தலைமையிலான அதிகாரிகள் கொண்ட குழுவினர் நேற்று மேல்பாக்கம் பகுதியில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அரக்கோணம்- காட்பாடி இரு மார்க்கத்திலும் மற்றும் திருத்தணி ரயில் பாதை, மேலும், யார்டு பகுதியில் தண்டவாளங்களின் பாயின்ட்டுகளை ஆய்வு செய்தார். இதையடுத்து, பராமரிப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட வேண்டும். மேலும், இதுபோன்று ரயில் தடம்புரளும் சம்பவங்கள் இனி வரும் காலங்களில் நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என ஆலோசனை வழங்கினார்.

பின்னர், சென்னை கோட்ட மேலாளர் நவீன் குலாத்தி நிருபர்களிடம் கூறுகையில், ‘அரக்கோணம் அடுத்த மேல்பாக்கம் பகுதியில் அடிக்கடி சரக்கு ரயில்கள் எதனால் தடம்புரளுகிறது என்பது குறித்து கண்டறிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். அரக்கோணம் - காஞ்சிபுரம் செல்லும் ரயில் மார்க்கத்தில் தக்கோலம் ரயில் நிலையம் பகுதியில் இருந்து, அரக்கோணம் ரயில் நிலையம் வரை மாற்று மின் பாதை அமைக்கும் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன. இவ்வழியில் ரயில்வே கேட் அமைக்கும் பணி நிறைவடைந்தவுடன், வரும் டிசம்பர் மாதம் முதல் சர்க்கிள் (வட்ட வடிவில்) பாதையில் ரயில் போக்குவரத்து தொடங்கப்படும். இதற்கான பணிகள் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது’ என்றார். பாக்ஸ் சர்க்கிள் ரயில் குறித்த தகவல்...சர்க்கிள் ரயில் பாதை என்பது சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் அரக்கோணம் வழியாக மீண்டும் சென்னை கடற்கரைக்கு செல்வதாகும். இதேபோல், சென்னை கடற்கரையில் இருந்து அரக்கோணம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் தாம்பரம் வழியாக மீண்டும் சென்னை கடற்கரைக்கு செல்வதாகும். இந்த ரயில் பாதை வழியாக டிசம்பர் மாதம் முதல் மின்சார ரயில் சேவை தொடங்கப்படவுள்ளது.

Related Stories: