இளம்பெண்ணை நிச்சயித்து திருமணத்திற்கு மறுப்பு சமரசம் பேசி நீதிபதி திருமணம் நடத்தி வைத்தார் திருவண்ணாமலை அருகே

திருவண்ணாமலை, அக்.5: திருவண்ணாமலை அருகே இளம்பெண்ணை நிச்சயம் செய்துவிட்டு, திருமணம் செய்ய மறுத்த புகாரின்பேரில், மாவட்ட நீதிபதி சமரசம் பேசி திருமணத்தை நடத்தி வைத்தார்.திருவண்ணாமலை அடுத்த ராதாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முகமது(25). இவரும், அதே பகுதியை சேர்ந்த ஷாபின்(20) என்பவரும் நீண்டநாட்களாக காதலித்து வந்தனர். இதையடுத்து, இருவீட்டாரின் சம்மதத்தின்பேரில், கடந்த 2015ம் ஆண்டு இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. பின்னர், வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றுவந்த பின்னர், திருமணம் செய்து கொள்வதாக முகமது கூறிவிட்டு சென்றார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் ஊர் திரும்பினார்.

இந்நிலையில், முகமதுவுக்கும், ஷாபினுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையறிந்த முகமதுவின் பெற்றோர் அவருக்கு வேறு இடத்தில் பெண் பார்க்க முடிவு செய்தனர்.இதுகுறித்து, ஷாபின் நேற்று முன்தினம் திருவண்ணாமலை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் புகார் செய்தார். அதன்பேரில், இருதரப்பினரையும் வரவழைத்த மாவட்ட நீதிபதியும், சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான ஜி.மகிழேந்தி பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் இருதரப்பினரும் சமாதானம் அடைந்தனர். இதையடுத்து, அவர்களது முறைப்படி சட்டப்பணிகள் ஆணைக்குழு வளாகத்தில் மாவட்ட நீதிபதி முன்னிலையில் திருமணம் நடந்தது.அப்போது, சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் ராஜ்மோகன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Related Stories: