கனமழையால் நீர்நிலைகள் நிரம்ப தொடங்கின *அதிகபட்சமாக செய்யாறில் 60 மிமீ மழை பதிவு *பள்ளி மாணவர்கள் கடும் அவதி திருவண்ணாமலை மாவட்டத்தில்

திருவண்ணாமலை, அக்.5: திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் நேற்றும் தொடர்ந்து கனமழை பெய்தது. அதனால், நீர்நிலைகளின் நீர்மட்டம் உயரத்தொடங்கியிருக்கிறது.

வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. மேலும், அடுத்த சில நாட்கள் மழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர்ந்து நேற்றும் கனமழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக செய்யாறில் 60 மிமீ மழை பதிவானது. ஆரணியில் 15.20 மிமீ, செங்கம் 4.60 மிமீ, சாத்தனூர் 17.40 மிமீ, வந்தவாசி 9 மிமீ, போளூர் 20.80 மிமீ, திருவண்ணாமலை 21.20 மிமீ, தண்டராம்பட்டு 18.60 மிமீ, கலசபாக்கம் 31 மிமீ மழை பதிவானது.கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து நீடிக்கும் மழையால், நீர் நிலைகளின் நீர்மட்டம் உயரத் தொடங்கியிருக்கிறது. விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனாலும், தொடர் மழையால் பணிக்கு செல்வோர், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் தவிப்படைந்தனர்.பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்காததால், கொட்டும் மழையில் நனைந்தபடி மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் நிலை ஏற்பட்டது. தொடர் மழையால், சாலைகளில் மழை வெள்ளம் தேங்கியிருந்தன. தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் கரைபுரண்டது.

மேலும், சாத்தனூர் அணைக்கான நீர்வரத்து நேற்று மாலை நிலவரப்படி வினாடிக்கு 598 கன அடியாக அதிகரித்திருக்கிறது. அணையின் நீர்மட்டம் ெமாத்த உயரமான 119 அடியில், 92.45 அடி நிரம்பியிருக்கிறது. நீர் கொள்ளளவு மொத்தமுள்ள 7,321 மில்லியன் கன அடியில் 2,739 மி.க.அடி நீர் இருப்பு உள்ளது.தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை நீடிப்பதால், அணைக்கான நீர்வரத்து அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர். செண்கபகத்தோப்பு அணை, மிருகண்டா அணை, குப்பனத்தம் அணைகளின் நீர்மட்டங்களில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை.திருவண்ணாமலை மாவட்டத்தில், அடுத்த சில நாட்களில் கன மழை நீடிக்கும் வாய்ப்பு இருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தியிருக்கிறது. மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கவும், குடியிருப்புகள் பாதிக்கப்பட்டால் மாற்று இடங்களில் தங்க வைக்கவும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

Related Stories: