₹3 லட்சம் மதிப்பிலான மூலப்பொருட்கள் நாசம் தண்டராம்பட்டு அருகே பரபரப்பு அனுமதியின்றி இயங்கிய பட்டாசு குடோனில் தீ விபத்து

தண்டராம்பட்டு, அக்.5: தண்டராம்பட்டு அடுத்த தானிப்பாடியில் அனுமதியின்றி இயங்கிய பட்டாசு குடோனில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில், சுமார் ₹3 லட்சம் மதிப்பிலான பட்டாசு மூலப்பொருட்கள் எரிந்து நாசமாயின. திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த தானிப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ஜீவா(48). இவருக்கு சொந்தமான பட்டாசு கிடங்கு அதே பகுதியில் உள்ளது. அங்கு பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும், பட்டாசுகள் தயாரிப்பதற்கான பேப்பர், திரி உள்ளிட்ட மூலப்பொருட்களை, தனது வீட்டின் மாடியில் உள்ள அறையில் வைத்து, குடோனாக பயன்படுத்தி வந்தார். இதற்கு உரிய அனுமதி பெறவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று காலை 7 மணியளவில் ஜீவா வீட்டில், பட்டாசு மூலப்பொருட்கள் வைத்திருந்த அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக தண்டராம்பட்டு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் ஒரு மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.ந்த விபத்தில் சுமார் ₹3 லட்சம் மதிப்பிலான மூலப்பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. தகவலறிந்த தானிப்பாடி போலீசார் தீவிபத்து குறித்து விசாரணை நடத்தினர். அப்போது மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: