திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு : வினாடிக்கு 486 கன அடி வரத்து

திருவண்ணாமலை, அக்.4: திருவண்ணாமலை மாவட்டத்தில், தொடர்ந்து நேற்றும் பரவலான கனமழை பெய்தது. மேலும், சாத்தனூர் அணைக்கு வினாடிக்கு 486 கன அடி நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை காலம் தொடங்கியிருப்பதால், திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பரவலான மழை பெய்து வருகிறது. திருவண்ணாமலையில் நேற்று மதியத்தில் இருந்தே மேகம் சூழ்ந்த நிலை காணப்பட்டது. அதைத்தொடர்ந்து, மதியம் 3 மணியளவில் தொடங்கிய கனமழை விட்டு, விட்டு இரவு வரை நீடித்தது. அதனால், நகரின் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கியது. சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டது. அவலூர்பேட்டை சாலையில் வழக்கம்போல மழை வெள்ளமும், கழிவுநீரும் சாலையில் பெருக்கெடுத்து தேங்கியதால், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் அவதிபட்டனர்.

அதேபோல், சன்னதி தெரு, காந்திநகர் பைபாஸ் சாலை, பெரியார் சிலை சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளிலும் கழிவுநீருடன் கலந்து மழை வெள்ளம் சாலையில் பெருக்கெடுத்தது. அதனால், கால்வாய்களில் தேங்கியிருந்த பிளாஸ்டிக் கழிவுகள் சாலைகளில் தேங்கின. அதேபோல், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலான கனமழை பெய்தது. அதனால், நிலத்தடி நீர்மட்டம் உயரத்தொடங்கியிருக்கிறது. விவசாய பாசன கிணறுகளிலும் நீர்மட்டம் உயரத் தொடங்கியிருக்கிறது. கனமழை காரணமாக, மாவட்டத்தின் பல பகுதிகளில் மின் தடை செய்யப்பட்டது.

இந்நிலையில், சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து நேற்று முன்தினம் இரவு முதல் தொடங்கியிருக்கிறது. அதன்படி, அணைக்கு வினாடிக்கு, 486 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அதனால், அணையின் நீர்மட்டம் நேற்று மாலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 92.10 அடியாக உள்ளது. ஒரு நாளில் சுமார் ஒரு அடி நீர்மட்டம் உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஒசூர் கெலவரப்பள்ளி அணை மற்றும் கிருஷ்ணகிரி அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், அணைக்கான நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

Related Stories: