கண்ணைக் கட்டிக்கொள்ளாதே-தடுக்கக் கூடியதும் குணப்படுத்தக் கூடியதும்

நன்றி குங்குமம் டாக்டர்  

கண் மருத்துவர் என்ற முறையில் முற்றிலுமாகப் பார்வை இழந்தவர்களை சந்திக்க வேண்டியதாக இருக்கும். அப்படி பார்வையிழப்பு ஏற்பட்ட  ஒவ்வொருவரை சந்திக்கும் பொழுதும் இவருக்கு இந்த நிலையை எந்த விதத்திலாவது தடுத்திருக்கலாமா என்ற கேள்வி தவறாமல் எனக்குள் எழும். பிறந்தது முதல் இந்தப் பூவுலகைப் பார்த்து ரசித்து வளர்ந்த ஒரு நபருக்கு, நடுவில்

பார்வையிழப்பு ஏற்படுவது சாதாரண விஷயம் அல்ல. அது அவரை மட்டுமல்லாது, அவரது குடும்பத்திற்கும், சுற்றியுள்ள சமூகத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய ஒன்று.  அறியாமையே பலரின் பார்வையிழப்பிற்கான காரணமாக அமைகிறது. அதனால் பிற தீவிர உடல் பிரச்சனைகளைப் போலவே பார்வையிழப்பையும் தடுப்பதற்கான வழிவகைகளைச் செய்ய வேண்டியது

அவசியமாகிறது.

50 ஆண்டுகளுக்கு முன்பாக வைட்டமின் A குறைபாட்டால் பல குழந்தைகளுக்கு பார்வை இழப்பு ஏற்பட்டது. கல்வி, விழிப்புணர்வு, வைட்டமின் ஏ சத்து மருந்துகள் தீவிரமாக வழங்கப்பட்டு தற்போது இந்த நிலை அறவே ஒழிக்கப்பட்டு விட்டது. சுத்தம், சுகாதாரம் குறித்த புரிதல் இல்லாத ஒரு காலகட்டத்தில் பாக்டீரியா கிருமியால் ஏற்படும் Trachoma என்ற கண்நோய் பலரின் பார்வையிழப்பிற்குக் காரணமாக அமைந்தது. இன்றைய மருத்துவர்கள் புத்தகங்களில் மட்டுமே இந்த நோயைப் பற்றி படிக்கிறார்கள்.

அடுத்த காலகட்டத்தில் கண்பார்வை இழப்புக்கு முக்கியக் காரணமாக அமைந்தது கண்புரை. வயது முதிர்வு காரணமாகக் கண்புரை ஏற்பட்டு நடக்க முடியாமல் வீட்டில் முடங்கிக் கிடந்தவர்கள் ஏராளம். கண் பார்வை இல்லாத காரணத்தாலேயே விபத்துகள் நடந்தன, குளியலறையில் தவறி விழுந்து காயம் ஏற்பட்டது, சரியாக உணவைப் பார்த்து உண்ண முடியாத நிலையும் கூட. கண்புரையினால் முந்தைய தலைமுறைகளின் வாழ்நாள் தரமற்றதாகவும், குறைவாகவும் இருந்தது என்றே கூறுவேன்.

தற்போது அரசு, அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளின் பெருமுயற்சியால் கண்புரை அறுவை சிகிச்சை எளிதாகி இருக்கிறது. கண்புரை சிகிச்சையில் பெருமளவு முன்னேறிய நிலையில், பார்வைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் அடுத்த முக்கிய காரணி சர்க்கரை நோய் என்பதை உணர்ந்து சர்க்கரை நோயினால் ஏற்படும் கண் பாதிப்பிற்கான பரிசோதனைகளும், சிகிச்சைகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. பட்டியலில் அடுத்ததாக வரும் கண்ணழுத்த நோய்க்கான விழிப்புணர்வும், சிகிச்சை முறைகளும் பரவலாக்கி இருக்கிறோம்.

இது நம் நாட்டின் நிலைமை தான்.  ஒவ்வொரு நாட்டிலும் அவர்களுடைய தட்பவெப்பநிலை, அங்கு வசிக்கும் மக்களின் மரபணு சார்ந்த காரணிகள், பொருளாதார நிலை இவற்றைப் பொறுத்து முக்கிய கண் பிரச்சனைகளின் தன்மையும் மாறுபடும். உதாரணமாக ஆப்பிரிக்க நாடுகளில் ஒருவித ஒட்டுண்ணிகளால் ஏற்படும் river blindness என்ற நிலை மிகக் கொடுமையானது. Onchocerca volvulus என்ற ஒட்டுண்ணிக்கு எதிராக தீவிரமாகப் போராடி அதைக் கட்டுப்படுத்தினர்.  

மேலைநாட்டினர் கண்பார்வை இழப்புக்கு முக்கியக் காரணமாகக் கருதுவது வயது முதிர்வு காரணமான age related macular degeneration என்ற விழித்திரைத் தேய்மானப் பிரச்சனை நம் நாட்டவரை விட மேலை நாட்டவர்களை இது அதிகம் பாதிக்கிறது. அதனால் எழுபதைக் கடந்த முதியோர்களுக்கு வருடாந்திரக் கண் பரிசோதனைகள் சில நாடுகளில் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாட்டிலும் அந்த நாட்டிற்கே உரித்தான குறிப்பிட்ட பிரச்சினைகள் கண்டறியப்பட்டு அவற்றுக்கான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. வளரும் நாடுகளுக்கு உலக சுகாதார நிறுவனமும் வளர்ந்த நாடுகளும் பல உதவிகளை செய்து வருகின்றன. இத்தனை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் கவிஞர் வேர்ட்ஸ்வொர்த்  தன்னுடைய புகழ்பெற்ற கவிதையில் சொன்னது போல Miles to go before we sleep என்றே நான் சொல்வேன். தடுப்பு நடவடிக்கையில் கண் மருத்துவம் இன்னும் பல மடங்கு தூரம் பயணிக்க வேண்டியது இருக்கிறது. பார்வைக் குறைபாட்டின் எண்ணற்ற காரணங்கள் குறித்த கல்வி அறிவு மக்களை சென்றடைய வேண்டியதாக இருக்கிறது.

கண் பரிசோதனைக்கு பயன்படுத்தப்படும் Snellen’s சார்ட்டில் முதல் எழுத்தை ஒருவரால் படிக்க முடியவில்லை என்றால் அவருடைய பொருளீட்டும் திறன் குறைகிறது. அதனை Economic blindness என்கிறோம். பார்வை இல்லாததால் ஒருவருக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு தேவைப்பட்டால் அதை legal blindness என்கிறார்கள்.

தன்னுடைய பார்வைக் குறைபாட்டின் காரணமாக தன் சுற்றத்தாருடன் ஒரு மனிதரால் பேசிப் பழகி இயல்பாக இருக்க முடியவில்லை என்றால் அதை Social blindness என்கிறோம்.

தன்னுடைய வேலையைக் கூட ஒருவரால் செய்து கொள்ள முடியவில்லை, அதற்கு மற்றவரின் உதவி தேவைப்படுகிறது என்றால் அதை manifest blindness என்கிறார்கள். இரண்டு கண்களிலும் சிறிய வெளிச்சத்தை கூட உணர முடியாத தன்மையை absolute blindness என்கிறோம். இவை அனைத்தும் தனிப்பட்ட ஒரு நபரின் பார்வையின்மையை வகைப்படுத்த  பயன்படுத்தப்படும் சொற்கள்.

அரசு தன்னுடைய திட்டங்களை வகுப்பதற்காக, வேறு ஒரு வகையில் பார்வையிழப்பை வகைப்படுத்துகிறது. Treatable blindness என்றால் மருத்துவ சிகிச்சை மூலம் சரி செய்யக்கூடிய பார்வையிழப்பு என்பது பொருள். கண்புரை, கருவிழியின் சில பிரச்சனைகள் இந்த வகையில் வரும். சில காரணிகளை Preventable blindness என்று வகைப்படுத்தி இருக்கிறோம். ஆரம்பம் முதலே செயலாற்றினால் பார்வையிழப்பைத்  தடுக்கலாம் என்பவை இவை. சர்க்கரை நோய் இதில் முதன்மையானது. பயணத்தின் போது ஹெல்மெட் அணிவது, வேலை பார்க்கும் இடத்தில் பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைபிடிப்பது போன்ற செயல்களால் விபத்தினால் வரும் பார்வையிழப்புகளை முற்றிலுமாகத் தடுக்க முடியும்.

தடுக்கக்கூடிய மற்றும் குணப்படுத்தக்கூடிய இரண்டு வகைப் பிரச்சனைகளையும் மொத்தமாக சேர்த்து Avoidable blindness என்று சொல்கிறோம். இந்தியாவில் ஏற்படும் பார்வையிழப்புகளில் 85 முதல் 90 சதம் வரை இந்த வகை தான் என்பது நாம் அறிந்து கொள்ள வேண்டிய நல்ல செய்தி.ஏன் பார்வையிழப்புக்கான காரணிகளை இத்தனை வகைகளின் கீழ் பிரிக்க வேண்டும்? ‘டிசைன் டிசைனா பேரு வைக்கிறது வீண் வேலை இல்லையா?’ என்று உங்களுக்குத் தோன்றலாம். எந்தெந்த நோய்களின் மேல் கவனம் செலுத்த வேண்டும், அதற்கான திட்டங்கள் வகுக்க வேண்டும் என்பதை இதன் மூலம் தான் பிரித்தறிய முடிகிறது. ஆரம்ப கட்ட சிகிச்சை முறைகள், தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதும், நிதி ஒதுக்குவதும் இதனாலேயே  சாத்தியமாகிறது.

இந்த அவசிய நடவடிக்கைகளை மேற்கொள்ள தேசிய பார்வையிழப்பு தடுப்புத் திட்டத்தை (National programme for control of blindness) மத்திய அரசு 1982ல் உருவாக்கியது. ஆரம்பப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பள்ளி மாணவர்களுக்குக் கண் பரிசோதனை செய்து, கண்டுபிடிக்கப்படாமல் இருக்கும் கண்புரை மற்றும் பார்வைக் குறைபாடுகளை கண்டறிவது அதன் மிக முக்கிய அம்சம். இதனாலேயே பல மாணவர்களின் வாழ்வில் வெளிச்சம் ஏற்றப்பட்டு இருக்கிறது. எனக்குக் கூட என்னுடைய எட்டாவது வயதில் அப்படி ஒரு முகாமில் தான் பிறவி முதல் இருந்த தூரப் பார்வைக் குறைபாடு கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர் என்னுடைய கல்வி, மற்றவரிடம் பழகும் தன்மை அனைத்தும் நல்லவிதமாக முன்னேறியது.

அடுத்த முக்கிய அம்சம் கண்புரை அறுவை சிகிச்சை. ஆரம்ப சுகாதார நிலையங்களில் கண் பரிசோதகர்களை நியமித்து அவர்கள் மூலமாக நாட்டின் கடைக்கோடி கிராமங்களுக்கும் சென்று கண்புரை பாதித்த மக்கள் கண்டுபிடிக்கப்படுகிறார்கள். பின் அவர்கள் வாகனங்கள் மூலமாக அந்தந்த மாவட்டத் தலைநகரங்களில் இருக்கும் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, கண்புரை அறுவை சிகிச்சை மேற்கொண்டு மீண்டும் வீட்டில் கொண்டு போய் விடும் பொறுப்பையும் அந்தப் பரிசோதகர்கள் செய்கின்றனர். கருவிழி மாற்று அறுவை சிகிச்சையை சிறப்புற செய்வதற்காக கண் வங்கிகளை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அமைப்பதிலும் தேசியத் திட்டம் முக்கியச் செயலாற்றுகிறது. கண் மருத்துவம் தொடர்பான விழிப்புணர்வு இந்த தேசிய திட்டத்தின் மற்றொரு முக்கியமான அம்சம்.

குழந்தை இல்லாத முதிய வயதுத் தம்பதி அவர்கள். தாத்தா, பாட்டி இருவருக்குமே வயது முதிர்வினால் கண்புரை ஏற்பட்டு, அதனால் சற்று மன நலமும் பாதிக்கப்பட்டது. உதவிக்கு யாருமற்ற நிலையில் வீட்டின் நடுவிலேயே மலஜலம் கழிக்கின்றனர், பாவமாக இருக்கிறது என்று உறவுக்கார இளைஞன் ஒருவன் அந்தப் பாட்டியை அழைத்து வந்தான். தாத்தாவிற்கு மனநல பாதிப்பு அதிகம், அவரை அணுக முடியவில்லை. எங்கள் தலைமை மருத்துவமனைக்கு பாட்டியை அழைத்துச் சென்று கண்புரை அறுவை சிகிச்சை செய்து அனுப்பினேன்.

வீட்டில் அவர்களின் நிலைமை பெருமளவு சீரானது. இது நடந்து ஒரு மாதம் இருக்கும். நேற்று அந்த இளைஞனை சந்தித்தபோது, ‘‘மேடம்! இந்த ஒரு மாசத்துல மூணு பேரை அதே ஹாஸ்பிடலுக்குக் கூட்டிட்டுப் போய் கண் ஆபரேஷன் பண்ணிருக்கேன். எல்லாரும் நல்லா இருக்காங்க!” என்றான் பெருமையுடன். எத்தனை திட்டங்கள் வகுத்தாலும் அது மக்களுக்குப் போய்ச் சேர்வதற்கு இந்த இளைஞனைப் போன்ற ஆர்வம் உள்ளவர்களின் துணையும் தேவை!

Related Stories: