இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி திருவண்ணாமலை பரபரப்பு சாலை விபத்தில் இறந்த சிறுமியின் குடும்பத்திற்கு

திருவண்ணாமலை, செப்.28: சாலை விபத்தில் இறந்த சிறுமியின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்காததால், திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் நேற்று, அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தாலுகாவிற்குட்பட்ட அத்திப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ரங்கா(45). இவரது மகள் ஆர்த்தி(13). அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த 2013ம் ஆண்டு அதே பகுதியில் நடைபெற்ற கோயில் திருவிழாவிற்கு ரங்கா தனது குடும்பத்தினருடன் சென்று விட்டு வீடு திரும்பினார்.அப்போது, அவ்வழியாக வந்த விழுப்புரம்- திருப்பதி செல்லும் அரசு பஸ், சிறுமி மீது ேமாதியது. இதில் படுகாயம் அடைந்த சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மணலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.

மேலும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் உரிய இழப்பீடு தொகை வழங்கக்கோரி திருவண்ணாமலை மோட்டார் வாகன விபத்து சிறப்பு சார்பு நீதிமன்றத்தில், கடந்த 2013 ஆண்டு சிறுமியின் தந்தை ரங்கா வழக்கு தொடர்ந்தார். கடந்த 19ம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.இதனை விசாரித்த மோட்டார் வாகன விபத்து சார்பு நீதிபதி பக்தவச்சலு, விபத்தில் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு இழப்பீடு தொகையாக ₹15 லட்சத்து 23 ஆயிரம் வழங்க வேண்டும். இழப்பீடு தொகை வழங்கவில்லை எனில் திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் இயங்கும் விழுப்புரம் மாவட்டம், பதிவெண் கொண்ட ஏதாவது ஒரு அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.அதன்படி, அரசு போக்குவரத்து கழகம் உரிய இழப்பீடு தொகை வழங்காததால், திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் நேற்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விழுப்புரம் பதிவெண் கொண்ட அரசு பஸ் ஒன்றை கோர்ட் ஊழியர்கள் ஜப்தி செய்து கோர்ட் வளாகத்திற்கு கொண்டு சென்றனர்.

Related Stories: