2வது நாளாக கருத்து கேட்பு கூட்டம் புறக்கணிப்பு செங்கத்தில் விவசாயிகள் தர்ணா சென்னை- சேலம் 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு

செங்கம், செப்.28: சென்னை- சேலம் 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, செங்கத்தில் 2வது நாளாக கருத்து கேட்பு கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை- சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டத்திற்கு, திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகாவில் நிலம் அளவீடு செய்யப்பட்ட விவசாயிகளுடான கருத்து கேட்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நேற்று முன்தினம் செங்கம் பிடிஓ அலுவலத்தில் நடந்த கூட்டத்தை விவசாயிகள் புறக்கணித்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் கூட்டம் நடைபெறவில்லை. இதைத்தொடர்ந்து, நேற்று பிடிஓ அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வெற்றிவேல் தலைமையில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, நேற்று காலை 10 மணியளவில் அதிகாரிகள், விவசாயிகளின் வருகைக்காக காத்திருந்தனர்.

அப்போது, மண்மலை, நாச்சிப்பட்டு, முத்தனூர், முடியனூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பசுமைச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தப்படி கோஷமிட்டுக்கொண்டு பிடிஓ அலுவலத்திற்கு வந்தனர். பின்னர் அதிகாரிகளிடம், எங்களது விளைநிலங்களை விட்டுத்தரமாட்டோம். கருத்து கேட்பு கூட்டத்தில் யாரும் கலந்து கொள்ள மாட்டோம். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் பசுமைச்சாலை திட்டம் கைவிடப்பட வேண்டும் ஆவேசமாக தெரிவித்தனர். பின்னர், அலுவலகத்திற்கு வெளியே அமர்ந்து கண்டன கோஷங்களை எழுப்பினர். நேற்று மாலை 5 மணிவரை விவசாயிகள் யாரும் கூட்டத்தில் கலந்து கொள்ள முன்வராததால் கூட்டம் நேற்றும் நடைபெறவில்லை.

Related Stories: