பூங்கா அருகே வாகனங்கள் நிறுத்துவதால் சுற்றுலா பயணிகள் பாதிப்பு

ஊட்டி, செப். 26:ஊட்டி தாவரவியல் பூங்கா செல்லும் மாற்றுப் பாதையில் வாகனங்கள் நிறுத்திக் கொள்வதால், உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். சேரிங்கிராஸ் பகுதியில் இருந்து ஊட்டி அரசு தாவரவில் பூங்காவிற்கு நேரடியாக ஒரு பாதை செல்கிறது. அசெம்பளி ரூம்ஸ் பகுதியில் இருந்து வண்டிச்சோலை வழியாக மற்றொரு பாதை பூங்காவிற்கு செல்கிறது. இது மாற்றுப்பாதையாக பயன்படுத்தப்படுகிறது. சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் சீசன் சமயங்கிளில் இச்சாலைகள் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டு வாகன நெரிசல் குறைக்கப்பட்டு வருகிறது. மேலும், பூங்காவை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களும் இந்த பாதையையே முக்கிய சாலையாக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இச்சாலையில் சிலர் வாகனங்களை நிறுத்திக் கொள்கின்றனர்.  குறிப்பாக, இப்பகுதியில் உள்ள லாட்ஜ் மற்றும் காட்டேஜ்களுக்கு வரும் சுற்றுலா பயணிகள் வாகனங்கள் இச்சாலையோரங்களில் நிறுத்திக் கொள்கின்றனர். இதனால், உள்ளூர் மக்கள் தங்களது அவசர தேவைகளுக்கு இச்சாலையை பயன்படுத்த முடியாமல் போகிறது. மேலும், கனரக வாகனங்களில் சுற்றுலா பயணிகள் வரும் போது, இவ்வழித்தடத்தில் போதிய இடம் இன்றி போக்குவரத்து தடை ஏற்படுகிறது. இதனால், உள்ளூர் மக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இச்சாலையில் வாகனங்கள் நிறுத்துதவற்கு போலீசார் தடை விதிக்க வேண்டும் என பூங்காவை சுற்றியுள்ள பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: