முதுமலையில் சூழல் சுற்றுலா வனத்துறை ஆலோசனை கூட்டம்

கூடலுார், செப்.26:  முதுமலையில் சூழல் சுற்றுலா குறித்த கலந்தாய்வு கூட்டம், புலிகள் காப்பக கள இயக்குனர் உலகநாதன் தலைமையில் தெப்பக்காட்டில்  நடைபெற்றது. கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் திராவிடமணி ஏற்பாட்டில் நடந்த இந்த  கூட்டத்தில், புலிகள் காப்பக இணை இயக்குனர் புஷ்பாகரன், மசினகுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளீதரன், திமுக ஒன்றிய செயலாளர் லியாகத் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  கூட்டத்தில் வனத்துறையினர் மற்றும் மசினகுடி சுற்றுலா வாகன ஓட்டுநர்கள், சுற்றுலா வழிகாட்டிகள், பறவைகள் ஆராய்ச்சி குழுவினர், ஆதிவாசிகள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாயார், சிங்காரா, சீகூர் வனப்பகுதிகளில் 7 வழித்தடங்கள் கண்டறியப்பட்டு அதில் உள்ளுர் சுற்றுலா வாகன ஓட்டிகள் மற்றும் ஆதிவாசிகள் பயனடையும் வகையில் சூழல் திட்டம் செயல்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

 மசினகுடி மற்றும் சுற்று வட்டார பகுதி மக்கள், தங்களது அத்தியாவசிய தேவைகளுக்கு, கல்லட்டி வழியாக ஊட்டி செல்லும் சாலையை எந்தவித தடையும் இன்றி 24 மணி நேரமும் பயன்படுத்தவும், வனப்பகுதிகளில் களைத்தாவரங்களான லான்டனா, பார்த்தீனியம், எபிடோரியம் போன்ற செடிகளை அழித்து புல்வெளிகளை அதிகரித்து யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள், விவசாயம் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குள் வராமல் தடுக்கவும், ஆதிவாசிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் வாழ்வாதாரத்தை பாதுகாக்க சூழல் சுற்றுலா மற்றும் வனத்துறை திட்டங்களில் வேலைவாய்ப்பை வழங்கவும் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. கூட்டத்தில் கள இயக்குனர் உலகநாதன் பேசுகையில், இத்திட்டம் எந்த விதத்திலும் தடை ஏற்படாமல் தொடர்ந்து நடத்தவும், ஆதிவாசி மக்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து விளக்கம் அளித்தார்.

Related Stories: