சேர வில் புருவமோ... மைக்ரோ பிளேடிங் மேஜிக்!

நன்றி குங்குமம் டாக்டர்  

பெண்கள் செய்து கொள்ளும் அழகு அலங்காரங்களான ஃபேசியல், பெடிக்யூர், மெனிக்யூர் வகைகளில் புதிதாக இடம் பிடித்திருக்கிறது ‘மைக்ரோ பிளேடிங்’. புருவங்கள் அடர்த்தி இல்லாமல் அல்லது புருவங்கள் சீராக இல்லாமல் காணப்படும் பெண்களுக்கு உதவும் வகையில் தற்போது பல அழகு நிலையங்களில் செய்யப்படும் அலங்கார முறைதான் ‘மைக்ரோ பிளேடிங்’.  அதாவது, புருவத்திற்கு மேலும் அழகைக் கூட்டும் அல்லது புருவத்தை சீர்படுத்தும் அலங்கார முறையாகும். புருவம் வளராமல் இருப்பது, மெல்லியதாக இருப்பது, புருவத்தில் ஆங்காங்கே முடிகள் உதிர்ந்து இருப்பது போன்ற பிரச்னைகளுக்கு ‘மைக்ரோ பிளேடிங்’ சிறந்த தீர்வாக அமையும்”.

மைக்ரோ பிளேடிங் செய்யும் முறை

முதலில் புருவம் வாடிக்கையாளர் விருப்பப்படி வளைவான வடிவத்தில் வரையப்படும்.  பின்னர்,  அதில் இதற்காக பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட மை நிரப்பப்பட்ட கருவி கொண்டு நிஜ முடிகள் போல உருவாக்கப்படும். இதற்கு குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது  எடுத்துக்கொள்ளும். மேலும்,  புருவ முடியின் தன்மையைப் பொறுத்து சிகிச்சை நேரம் மாறுபடும். இவ்வாறு வரைந்தபின், மூன்று அல்லது நான்கு நாட்கள் வரை புருவங்களில் அடத்தியான ‘மை திட்டுக்கள்’ தெரிவது போல் தோன்றும். பின்பு இயற்கையான நிறம் மற்றும் தோற்றத்துக்கு மாறிவிடும்.

மைக்ரோ பிளேடிங்கில் ‘டிண்ட்’ எனும் தற்காலிக அலங்காரம் மற்றும் நிரந்தர அலங்காரம் என இரண்டு வகைகள் உள்ளன. வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்குத் தகுந்தது போல் ரசாயனம் அல்லது இயற்கை மை கொண்டு புருவங்கள் அமைக்கப்படுகிறது. தற்காலிக அலங்காரம் ஒரு மாதம் அல்லது மூன்று வாரங்கள் வரை நீடிக்கக்கூடியது. நிரந்தர அலங்காரம் 2 முதல் 3 ஆண்டுகள் வரை நீடிக்கும். முறையாகப் பராமரித்தால் இது மேலும் நீளும்.

‘மைக்ரோ பிளேடிங்’ செய்து கொண்ட பிறகு புருவத்திற்கு மை, பென்சில் எதுவும் பயன்படுத்தத் தேவையில்லை.  அதுபோன்று, புருவத்தில் எண்ணெயும் தடவக்கூடாது. முகத்திற்கு சோப்பு, கிரீம்  பூசும்போதும் சரி அல்லது  பேசியல் செய்யும்போதும் சரி  புருவத்திற்கு அழுத்தம் கொடுக்கக்கூடாது.உடலில்  அலர்ஜி போன்ற  ஒவ்வாமை இருப்பவர்கள், மருத்துவரின் ஆலோசனை பெற்றே ‘மைக்ரோ பிளேடிங்’ செய்து கொள்ள வேண்டும்.

தொகுப்பு : தவநிதி.

Related Stories: