தூத்துக்குடியில் பருவமழையை சமாளிக்க போர்க்கால நடவடிக்கை

தூத்துக்குடி, செப். 25: தூத்துக்குடியில் வடகிழக்கு பருவ மழையைச் சமாளிக்க  போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி ஆணையாளர்  ஜான் வர்க்கீஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திகுறிப்பு: தூத்துக்குடி மாநகராட்சியில் 2015ம் ஆண்டு மாநகரின் வெளிப்புறத்திலிருந்து  வந்த  மழை வெள்ளத்தால் மாநகரின் வடக்கு பகுதிகளான முத்தம்மாள் காலனி,  ஆதிபராசக்தி நகர், ஸ்டேட் பாங்க் காலனி, குறிஞ்சி நகர்,  பி அண்ட் டி  காலனி, மடத்தூர்,  முள்ளக்காடு மற்றும் ராஜிவ் நகர் ஆகியவை மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிப்படைந்தது.     இதனைத் தொடர்ந்து  மாநகராட்சியின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த டிசம்பர் 2017ம்  மாதத்தில் பெருமழை மற்றும் எதிர் பாராத வெள்ள நீர் மாநகருக்குள் புகாதவாறு   நீர் வழிப் பாதைகளை தூர்வாரியதன் பயனாக கடந்த மார்ச் 14ம் தேதி பெய்த 200 மி.மீ.  கனமழையின் போது தூத்துக்குடி மாநகரப்பகுதிகளில் மழைநீர்   தேங்காமல்  8 மணி  நேரத்திற்குள்ளாக வடிந்தது.  தற்போது எதிர் வரும் வடகிழக்கு பருவமழையினை  கருத்தில் கொண்டு, மதுரை தேசிய நெடுஞ்சாலையில்  மேற்கு பகுதியில் உள்ள   காலாங்கரை, கழுகுபாதை மற்றும் கழுதை பாதை ஆகிய மூன்று ஓடைகளில் இருந்து  வரும் மழை வெள்ள நீரை வடக்கு பக்கம் உள்ள பெரிய பள்ளம் ஓடையின் வழியாக  கடலில் வெளியேற்றும் விதமாக தூர் வாருதல் மற்றும் பண்டுகரைகளை  பலப்படுத்தும் பணி. நீரோடைகளிலிருந்து  வரும் மழைநீரை சி.வ. குளத்தில்  நிரம்ப  செய்ய வசதியாக  சீமைக்கருவேல மரங்களை அப்புறப்படுத்தும் பணி நடக்கிறது.

பின்னர் சி.வ. குளத்தில் மழைநீர் சேகரிக்கப்பட்ட பின்னர்,  கூடுதலாக வரப்பெறும் மழைநீரை மீளவிட்டான் சாலை வழியாக 4ம் கேட் அருகில்  உள்ள கே.வி.கே. நகர் பக்கிள் ஓடையில் கலக்கும் பகுதி வரை முட் செடிகளை  அகற்றுவதுடன் பண்டுகரைகளை பலப்படுத்தும் பணி.செங்குளம் ஓடை வழியாக வரும்  வெள்ள நீரை தேசிய நெடுஞ்சாலை  வழியாக தெற்கு பக்கம் உள்ள உப்பாத்து ஓடையில்  கலக்கும் இடம் வரை முள்செடிகள் மற்றும் பண்டுகரைகளை பலப்படுத்தும் பணி  நடக்கிறது.

முள்ளக்காடு ஓடையை தூர்வாரும்  பணி. ஜார்ஜ் ரோடு முதல்  லசால்  பள்ளி வரையிலான மழைநீர் வடிகால் தூர்வாருதல் பணி. மாநகரில் உள்ள  அனைத்து மழைநீர் வடிகால்களையும் தூர்வாரும் பணி. அனைத்து மழைநீர்  வடிகால்கள் மற்றும் சிறு பாலங்களில் ஏற்பட்ட  அடைப்புகளை மீண்டும்  அப்புறப்படுத்தும் பணி. எப்.சி.ஐ. குடோன் முதல் திரேஸ்புரம் கடற்கரை வரை பக்கிள் ஓடை தூர்வாறும் பணி. மேற்படி பணிகளின் மூலம் மாநகரின்  வெளிப்பகுதியிலிருந்து மாநகரின் உள்பகுதிக்குள் நுழையும் மழைநீரானது  மாநகரப் பகுதிக்குள் குறிப்பாக  குடியிருப்பு பகுதிகளுக்குள் தேங்காதவாறு  சிரமமின்றி மழைநீர் வடிகால்  மற்றும் பக்கிள் ஓடை வாயிலாக கடலில்  சென்றடையும் வகையில் அனைத்து மழைநீர் வடிகால்களும் தூர்வாரும் பணிகள்  நடந்து வருகின்றன.

Related Stories: