தூத்துக்குடி அருகே சாலையில் தொங்கும் மின்கம்பியால் அரசு பஸ் சேவை திடீர் நிறுத்தம்

தூத்துக்குடி, செப். 25: தூத்துக்குடி கோரம்பள்ளம் அருகே வடக்கு  காலாங்கரை சாலையின் மத்தியில் மின்கம்பி அறுந்து தொங்குவதால் அரசு  பஸ் சேவை திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கிராம மக்கள் அவதிப்படுகின்றனர். தூத்துக்குடி கோரம்பள்ளம் அருகேயுள்ள  வடக்கு காலாங்கரை பொதுமக்கள் பொன்ராஜ் என்பவர் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து கலெக்டரிடம் அளித்துள்ள மனு:

  கோரம்பள்ளம் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட  வடக்கு காலாங்கரை கிராமத்திற்கு செல்லும் வேலைவாய்ப்பு அலுவலகம் முதல்  வடக்கு காலாங்கரை வரையிலான சாலையில் மின்கம்பம் சாய்ந்து மின்கம்பிகள் சாலையில் தொங்கியநிலையிலேயே காணப்படுகின்றன.  இருவாரங்களுக்கு மேலாகியும் இதைச் சீரமைக்க எவ்வித  நடவடிக்கையும் இல்லை. இதன் காரணமாக எங்கள் ஊருக்கு இயக்கப்பட்டு வந்த அரசு பஸ் சேவையும் திடீரென  நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே  மின்கம்பியை துரிதமாக அகற்றி சீரமைத்து பஸ் சேவையை மீண்டும் தொடர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: