பாவை வித்யாஸ்ரம் பள்ளிகளில் கல்வி மைய தொடக்க விழா

ராசிபுரம்,செப்.21:ராசிபுரம்  பாவை வித்யாஸ்ரம் பள்ளிகளின், விஜயதசமியில் இருந்து மழலையர்களுக்கான புதிய  வரவாக ‘‘டைனி சீட்ஸ்” என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள நவீன மழலையர் பள்ளி  முனைவு பற்றிய அறிமுக விழாவும், ஆசிரியர்களுக்கான பயிற்சி பட்டறையின்  துவக்க விழாவும் நடைபெற்றது.

இந்த விழாவிற்கு பாவை கல்வி நிறுவனங்களின்  தாளாளர் மங்கை நடராஜன் தலைமை வகித்தார். பாவை வித்யாஸ்ரம் பள்ளிகளின்  இயக்குநர் சதீஸ் முன்னிலை வகித்தார். ஆசிரியர் கௌரி தினேஷ் வரவேற்றார்.   விழாவில் இசைக்கலைஞரும், ராப்சோடி இசைப்பள்ளி நிறுவனருமான அனில் நிவாசன்  பேசியதாவது: ‘மாணவர்களை கலைஞர்களாக உருவாக்கும் பணி பள்ளிகளின்  ஆசிரியர்களிடம் உள்ளது. குழந்தைகளுக்கு இசையின் மூலமாக கல்வி கற்பதினால்  எளிதாக கல்வியோடு இசைந்து, ஆழமாகவும், முழுமையாகவும் கல்வியினை  கற்றுக்கொள்கிறார்கள். மேலும் இசை மூலம் கல்வி கற்பதனால் குழந்தைகளின் குழு  மனப்பான்மை மேம்படுகிறது. அதோடு கல்வியை கற்றுக்கொள்வதற்கு தங்கள் முழு  ஒத்துழைப்பினை தந்து உற்சாகத்தோடு கல்வி பயில்கின்றனர். மேலும், இசை  வாயிலாக எந்த பாடத்தினையும் எளிதாக கற்பிக்க முடியும். எனவே ஆசிரியர்களாகிய  நீங்கள் கல்வியும், கலையும் மாணவர்களுக்கு கற்பித்து நம் பாரம்பரிய கலைகளை  அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்ல வேண்டும் என்றார்.தொடர்ந்து ஆசிரியர்களுக்கு இசை மூலமாக எவ்வாறு கல்வி கற்பது என்பதை, பல்வேறு விதமான பயிற்சிகளின் மூலம் விளக்கமளித்தார்.

 

Related Stories: