போச்சம்பள்ளி பக்தர்கள் திருப்பதிக்கு நடைபயணம்

போச்சம்பள்ளி, செப்.21: போச்சம்பள்ளி பகுதியைச் சேர்ந்த பக்தர்கள், கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டவாறு திருப்பதிக்கு நடைபயணமாக புறப்பட்டுச்சென்றனர்.கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி மற்றும் சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்ற திருப்பதிக்கு நடைபயணமாக செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆண்டுக்கு ஒரு முறை அல்லது நினைக்கும் போதெல்லாம் திருப்பதி செல்வது கிடையாது. அருள் வந்து சாமியாடும் பெண்கள், திருப்பதிக்கு அனைத்து கிராம மக்களும் ஒன்று திரண்டு வரவேண்டும் என்று கூறிய பிறகே ஒட்டுமொத்தமாக கூடி முடிவெடுத்து திருப்பதிக்கு செல்வார்கள். அதேபோல், இந்தமுறை சாமிவந்து அழைத்ததால் நேற்று முன்தினம் இரவு போச்சம்பள்ளி, குள்ளனூர், கோணணூர், ஜம்புகுடப்பட்டி, சந்தம்பட்டி உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என பக்தி கோஷமிட்டவாறு திருப்பதிக்கு நடைபயணமாக புறப்பட்டுச் சென்றனர்.இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ஆண்டுதோறும் புரட்டாசி வழிபாட்டிற்காக அனைவரும் திருப்பதிக்கு நடைபயணமாக செல்கிறோம். சுமார் 255 கி.மீ. தூரம் திருப்பத்தூர் வழியாக வாணியம்பாடி, ஆம்பூர், வேலூர், சித்தூர் வழியாக திருப்பதியை சென்றடைய உள்ளோம். யாத்திரை செலவுக்காக வீட்டில் மஞ்சள் துணி கட்டிய உண்டியல் வைத்து, அதில் சனிக்கிழமைதோறும் காணிக்கை செலுத்துவோம். சேமிப்பு மற்றும் காணிக்கை பணத்தை எடுத்துக்கொண்டு புரட்டாசி மாதத்தில் திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்வதை கடைபிடித்து வருகிறோம் என்றனர்.

Related Stories: