திருச்சி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தம் சிறப்பு முகாம்

திருச்சி, செப்.21: திருச்சி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் சிறப்பு முகாம் வருகிற 23ம் தேதி நடைபெற உள்ளது.

திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட 9 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் குறித்த பணி கடந்த 1ம் தேதி முதல் நடந்து வருகிறது. இப்பணி அக்டோபர் 31ம் தேதி வரை நடைபெறுகிறது. வருகிற 23ம் தேதி (ஞாயிறு) அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. மேலும் அக்டோபர் 7 மற்றும் 14 ஆகிய நாட்களில் (ஞாயிற்றுக்கிழமைகள்) அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.சிறப்பு முகாம் நடைபெறும் நாட்களில் வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியல் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும். வாக்காளர்கள் தங்கள் பெயர், விவரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம்.வரும் 2019ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி அன்று 18 வயது நிரம்பியவர்கள் (31.12.2000 மற்றும் அதற்கு முன்னர் பிறந்தவர்கள்) சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் படிவம் 6-ஐ பூர்த்தி செய்து புதியதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்துக் கொள்ளலாம்.

2016, 2017ம் ஆண்டுகளில் பெயர் சேர்க்க விண்ணப்பித்து, இதுவரை வாக்காளர் அடையாள அட்டை பெறாதவர்கள் 23.9.2018ம் தேதி முகாம் தினத்தன்று தங்களது வாக்குச்சாவடியில் வாக்குச்சாவடி நிலை அலுவலரிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம் என கலெக்டர் ராஜாமணி தெரிவித்துள்ளார்.

Related Stories: