இ-சேவை மையங்களில் பிரின்ட் நிறுத்தம் : ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை பெற முடியாமல் மக்கள் தவிப்பு

திருவள்ளூர், செப். 21: இ-சேவை மையங்களில் திருத்தம் செய்த ஸ்மார்ட் ரேஷன் கார்டு, வண்ண வாக்காளர் அடையாள அட்டைகளை பிரின்ட் செய்து வழங்கும் பணி கடந்த 5 மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 1,012 ரேஷன் கடைகள் உள்ளன. இக்கடைகளுக்கு உட்பட்டு 5 லட்சம் ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன. இவற்றில், 65 சதவீதம் கார்டுகள் ரேஷன் அரிசி பெறும் தகுதியுடையவை. இந்த ரேஷன் கார்டுகளுக்கு மாவட்ட வழங்கல் துறை மூலம் அரிசி, சர்க்கரை, பருப்பு வகைகள், உப்பு, மண்ணெண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், கடந்த 2005ம் ஆண்டு வழங்கப்பட்ட ரேஷன் கார்டுகள் 2009ம் ஆண்டுடன் காலக்கெடு முடிந்தது. இதையடுத்து, ஆண்டுதோறும் உள் தாள்கள் இணைத்து மக்கள் பயன்படுத்தி வந்தனர். அந்த ரேஷன் கார்டுகள் கந்தலான நிலையில், கடந்தாண்டு புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டது.இந்த ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில், பெயர், முகவரி, போட்டோ உள்ளிட்ட பல்வேறு குளறுபடிகள் உள்ளது. இந்த குளறுபடிகளை, மாவட்டத்தில் உள்ள இ-சேவை மையங்களில் ஆன்லைன் மூலம் திருத்தம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.இ-சேவை மையங்களில் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் பெயர் மாற்றம், திருத்தம், பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், திருத்தம், கடை மாற்றம், மொபைல் எண் மாற்றம் உள்ளிட்ட திருத்தங்கள் செய்ய பதிவு செய்யப்படுகிறது. அப்படி, ஸ்மார்ட் கார்டுகளில் திருத்தம் செய்தபின், மாற்றம் செய்த புதிய ஸ்மார்ட் கார்டுகளை இ-சேவை மையங்களில் பிரின்ட் செய்து கொடுக்கப்பட்டு வந்தது.இந்நிலையில், கடந்த 5 மாதங்களாக ஸ்மார்ட் கார்டுகளில் திருத்தம் செய்து, புதிய கார்டுகள் பிரின்ட் செய்து வழங்கும் பணி திருவள்ளூர் மாவட்டத்தில் இ-சேவை மையங்களில் நிறுத்தப்பட்டுள்ளது. இதேபோல், வண்ண வாக்காளர் அடையாள அட்டை பிரின்ட் செய்யும் பணியும் நிறுத்தப்பட்டுள்ளது.பொதுமக்கள் அரசு மற்றும் தனியார் நிறுவன உதவிகள் பெற வேண்டுமென்றால் ரேஷன் கார்டு நகல் அல்லது வாக்காளர் அடையாள அட்டை நகல் ஆதாரமாக கோரப்படுகிறது. ஏனெனில், ரேஷன் கார்டில் தான் ஒரு குடும்பத்தின் முழு விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும்.இதனால், ரேஷன் கார்டு திருத்தம் செய்தும், தங்களின் அடிப்படை தேவைகளுக்காக ஆதாரம் வழங்க முடியாமல் மாவட்டத்தில் பல ஆயிரக்கணக்கான மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, இ-சேவை மையங்களில் ஸ்மார்ட் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டை பிரின்ட் செய்து வழங்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: