தனி தாசில்தார் பதவி நிரப்புவதற்காக மைலம்பட்டி வருவாய் கிராமத்தை இரண்டாக பிரிக்க வேண்டும்

கடவூர், செப்.21: தனி தாசில்தார் பதவி நிரப்புவதற்காக மைலம்பட்டி வருவாய் கிராமத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கடவூர் பகுதியின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்த கடவூர் என்னும் தாலுகா கடந்த 2009ம் ஆண்டு 23 கிராமங்களுடன் கடவூர், மைலம்பட்டி என இரண்டு  வருவாய் கிராமங்களுடன் புதிய தாலுகா உதயமாகியது. இங்கு சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை உள்ளனர். இங்கு இடையபட்டி கிழக்கு மற்றும் மேற்கு, முள்ளிப்பாடி, பாலவிடுதி, மாவத்தூர், செம்பியநத்தம், ஆதனூர் ஆகிய கிராமங்களுடன் கடவூர் என்னும் வருவாய் கிராமம் செயல்படுகிறது. கீழப்பகுதி, மேலப்பகுதி, வாழ்வாங்மங்கலம், தேவர்மலை, காளயப்பட்டி, வரவணை, மஞ்சாநாயக்கன்பட்டி, தென்னிலை, கீரனூர், வெள்ளப்பட்டி, பண்ணப்பட்டி, பாப்பயம்பாடி, வடவம்பாடி, கொசூர், மத்தகிரி, தொண்டமாங்கிணம் ஆகிய கிராமங்களுடன் மைலம்பட்டி என்னும் வருவாய் கிராமம் செயல்படுகிறது.

கடவூர் தாலுகா உதயமாகி 9 ஆண்டுகள் ஆகியும் சமூக பாதுகாப்பு தனி தாசில்தார் உள்பட பல்வேறு பணியிடங்கள் காலியாகவே உள்ளன. சமூக பாதுகாப்பு தாசில்தாரை பார்க்க வேண்டும் என்றால் குளித்தலைதான் செல்ல வேண்டும். இதனால் பொதுமக்களுக்கு வீண் காலவிரையமாகிறது. மேலும் தாலுகாவில் மூன்று வருவாய் கிராமங்கள் இருந்தால்தான் சமூக பாதுகாப்பு தனி தாசில்தார் பணி நிரப்பப்படும் என கூறப்படுகிறது. அதனால் மைலம்பட்டி வருவாய் கிராமத்தை இரண்டாக பிரித்து கீரனூர் அல்லது பண்ணப்பட்டி இந்த இரண்டு கிராமங்களில் ஒன்றை வருவாய் கிராமமாக பிரித்தால் கடவூர்  தாலுகாவில் காலிப்பணியிடங்கள் நிரப்ப வாய்ப்பு உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி மைலம்பட்டி வருவாய் கிராமத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என  கடவூர் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: