உலக விண்வெளி வாரவிழா டிப்ளமோ, ஐடிஐ மாணவர்களுக்கு தண்ணீர் ராக்கெட் ஏவுதல் போட்டி அக்.4ல் நடக்கிறது

நாகர்கோவில், செப்.21: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன உந்தும வளாக அதிகாரியின் செய்திகுறிப்பு: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன உந்தும வளாகம் சார்பில் வரும் அக்டோபர் 4ம் தேதி முதல் 10ம்தேதி வரை உலக விண்வெளி வாரம் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தொழில்நுட்பம் மற்றும் தொழில்பயிற்சி (டிப்ளமோ-ஐடிஐ) மாணவ மாணவிகளுக்கு தண்ணீர் ராக்கெட் ஏவுதல் போட்டி நடைபெற உள்ளது. திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த தொழில்நுட்பம் மற்றும் ெதாழில் பயிற்சி மாணவ மாணவியர் கல்லூரியின் மூலமாக பங்கேற்கலாம்.  ஒவ்வொரு கல்லூரியின் சார்பாகவும் 2 மாணவ மாணவியருக்கு மிகாமல் பங்கேற்கலாம். அக்டோபர் 3ம் தேதிக்குள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். போட்டி திருநெல்வேலியில் உள்ள மாவட்ட அறிவியல் மையத்தில் அக்டோபர் 4ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு நடைபெற உள்ளது. போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் கல்லூரி முதல்வரின் அனுமதி கடிதத்துடன் கலந்து கொள்ள வேண்டும்.

 இதனை போன்று அன்று காலை 10 மணிக்கு பேச்சு போட்டி நடைபெற உள்ளது. தமிழில் 6 முதல் 9ம் வகுப்பு வரை ‘விண்வெளி சுற்றுலா’ என்ற தலைப்பிலும், 10, 11 மற்றும் 12ம் வகுப்புக்கு ‘வேற்று கிரகத்தில் ஒன்றுபட்ட குடியிருப்பு’ என்ற தலைப்பிலும், ஆங்கிலத்தில் ‘ஸ்பேஸ் டூரிசம்’, ‘யுனைடெட் காலனி இன் அதர் பிளானட்’ என்ற தலைப்பிலும் நடைபெற உள்ளது. இப்போட்டியில் பங்கேற்க ஒரு பள்ளியில் இருந்து இரு மாணவர்கள் வீதம் 4 பிரிவுகளில் 8 மாணவர்கள் வரை பங்கேற்கலாம். 3ம் தேதிக்குள் பெயர் பதிவு செய்ய வேண்டும். பேச்சு போட்டிக்கான அதே தலைப்புகளில் கட்டுரை போட்டியும் நடைபெற உள்ளது. கட்டுரைகள் மாணவர்களின் பெயர், முகவரி, உறுதிமொழி மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் ஒப்புதலுடன் வரும் அக்டோபர் 1 க்கு முன்னர் ‘நிர்வாக அலுவலர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன உந்தும வளாகம், மகேந்திரகிரி, நெல்லை மாவட்டம்- 627 133’ என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: