வனத்துறை நடவடிக்கையை கண்டித்து பழங்குடியின பெண்கள் பொதுமக்கள் திடீர் மறியல் 3 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு

நாகர்கோவில், செப். 21 :குமரி மாவட்டத்தில் மலை பகுதிகளில் வசிக்கும் காணி இன பழங்குடி மக்களின் வன உரிமைகளுக்கு எதிராக செயல்படும் மாவட்ட வன அதிகாரி மற்றும் அலுவலர்கள் மீது வன உரிமைகள் சட்டம் மற்றும் பழங்குடியினருக்கான வன்கொடுமை தடுப்பு திருத்த சட்டம் 2015ன் படி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். வீடு கட்ட தேவையான மரம், மணல், கல் போன்ற பொருட்களை வனத்தில் இருந்து எடுத்து பயன்படுத்துதல்,  வன விளைச்சல் பொருட்களை சேகரம் செய்தல், மீன் பிடித்தல், நீர் தேக்கம் மற்றும் வன பகுதிகளில் கால்நடைகளை மேய்த்தல் போன்ற மன்னர் காலத்தில் வழங்கப்பட்ட பாரம்பரிய சமூக உரிமைகளை நிபந்தனைகளின்றி வழங்க வேண்டும். பழங்குடி மக்கள் தங்களுக்கு சொந்தமான முதிர்ந்த ரப்பர், கொல்லமாவு, அல்பீசா போன்ற மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி புது மரக்கன்றுகள் நடவு செய்ய அனுமதி வழங்க வேண்டும். குமரி மாவட்டத்தில் புலிகள் காப்பகம் அமைப்பதை நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக ஆதி வாசிகள் மகா சபா, குமரி மாவட்ட பிரிவு சார்பில் நாகர்கோவிலில் உள்ள வனத்துறை அலுவலகம் முன் நேற்று (20ம்தேதி) மறியல் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்துக்கு தமிழக ஆதி வாசிகள் மகா சபாவின் மாநில தலைவர் ராஜன் தலைமை வகித்தார்.  மாவட்ட தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட செயலாளர் நாகப்பன், துணைத்தலைவர் கிருஷ்ணன்குட்டி உள்பட பொறுப்பாளர்கள் முன்னிலை வகித்தனர். எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின், மனோ தங்கராஜ் ஆகியோர் பங்கேற்று கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பேசினர். இந்த மறியல் போராட்டத்தில் தச்சமலை, பின்னமூட்டுதேரி, களப்பாறை,  நடனம் பொற்றை, முடவன் பொற்றை, விளாமலை, மங்காமலை, வளையந்தூக்கி, படுபாறை, ஆலம்பாறை, புறாவிளை, வில்லுசாரிமலை, ஆறுகாணி, பத்துகாணி, கீரிப்பாறை, தலக்குமலை உள்பட சுமார் 40க்கும் மேற்பட்ட மலைவாழ் கிராமங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.

இந்த போராட்டத்தை டி.எஸ்.பி. இளங்கோ. இன்ஸ்பெக்டர்கள் பெர்னார்டு சேவியர், அன்புபிரகாஷ் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.  மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்வதற்காக போலீஸ் வாகனங்கள், மினி பஸ்கள் வரவழைக்கப்பட்டு இருந்தன. ஆனால் போலீசார் கேட்டுக் கொண்டதற்கிணங்க ரோட்டில் அமர்ந்து மறியல் செய்தவர்கள், பின்னர் எழுந்து வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் எம்.எல்.ஏ.க்கள் முன்னிலையில் போராட்ட பிரதிநிதிகள் வனத்துறை அதிகாரியை சந்தித்து பேசினர். அப்போது இந்த கோரிக்கைகள் தொடர்பாக 5ம் தேதி அனைத்து மலைவாழ் மக்கள் பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்துவது எனவும், மாவட்ட கலெக்டர் மற்றும் அரசின் கவனத்துக்கு இதை கொண்டு சென்று நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பது எனவும் உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மறியல்போராட்டம் அரை மணிநேரம் நீடித்ததால், நாகர்கோவில் பாலமோர் ரோட்டில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.  மறியலில் பங்கேற்க எஸ்.எம்.ஆர்.வி. மேல்நிலைப்பள்ளியில் அருகே இருந்து ஊர்வலமாகவும் போராட்டக்காரர்கள் வந்தனர்.

வன அலுவலகத்தில் குடியேறுவோம்இது குறித்து ஆதிவாசிகள் மகா சபா மாநில தலைவர் ராஜன் கூறுகையில், 5ம் தேதி எங்களது கோரிக்கைகள் தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தி சுமூக தீர்வு காணப்படும் என அதிகாரிகள் கூறி உள்ளனர். அவ்வாறு இதில் நடவடிக்கை எடுக்காமல் காலதாமதம் செய்தால் எங்களது போராட்டம் மீண்டும் தொடரும். இயற்கையாக நாங்கள் வீடுகள் அமைத்து உள்ளது போல், வனத்துறை அலுவலகத்துக்குள் புகுந்து இயற்கை வீடுகள் அமைத்து குடியேறுவோம் என்றார்.

Related Stories: