மழைநீர் கால்வாய் அமைக்கும் பணியில் பாரபட்சம் அதிகாரிகள் மீது பொதுமக்கள் புகார்

மானாமதுரை, செப். 19:  மானாமதுரை புது பஸ்நிலையத்தில் இருந்து ரயில்வே கேட் வரை  சர்வீஸ் ரோட்டில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணியை, பாதியில் நிறுத்தி பாரபட்சம் காட்டுவதாக, நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரிகள் மீது அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மதுரை-பரமக்குடி இடையே ரூ.937 கோடியில் நான்குவழிச்சாலையாக மாற்றும் பணி நடந்து வருகிறது. இதற்காக மானாமதுரை ரயில்வே கேட் பகுதியில் இருந்து புதிய பஸ்நிலையம் வரை நிலம் கையகப்படுத்தப்பட்டு மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. தற்போது ரோட்டின் இருபுறங்களிலும் சர்வீஸ் ரோடு அமைக்கும் பணி முடிவடைந்து, ரோட்டில் இருபுறமும் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ரயில்வே மேம்பாலத்தின் கிழக்குப்பகுதி சர்வீஸ் ரோட்டில் புது பஸ்நிலையம் வரை மழைநீர்கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், மேற்குபகுதியான கீழமேல்குடி விலக்கு சாலையில் இருந்து தனியார் லாட்ஜ் வரை மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. மேலும், கிழக்குப்பகுதி சர்வீஸ் ரோட்டின் அளவை காட்டிலும் மேற்குபகுதி சர்வீஸ் ரோடு குறுகலாக போடப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் பெரிய வாகனங்கள் செல்வதற்கு சிக்கல் ஏற்படும். இது தவிர மேற்குப்பகுதியில் நீர்ப்பிடிப்பு பகுதி, மானாமதுரை கண்மாய் ஆகியவை இருப்பதால் இப்பகுதியில் பெய்யும் மழைநீர் கண்மாய்க்கு செல்லாமல் சர்வீஸ் ரோட்டில் தேங்கும். அதே போல குடியிருப்புகளிலும் தண்ணீர் தேங்கும். எனவே, மேற்குப்பகுதியில் சர்வீஸ்ரோட்டில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணியை பாரபட்சம் இல்லாமல் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து அப்பகுதியை சேர்ந்த கேசவன் கூறுகையில், ‘கீழமேல்குடி விலக்குரோட்டில் இருந்து நூறு அடிவரை கால்வாய் அமைத்துவிட்டு, அதன்பின் ரயில்வேகேட் வரை உள்ள பகுதிகளில் மழைநீர் கால்வாய் அமைக்காமல் பாரபட்சம் காட்டுகின்றனர். இதனால் இப்பகுதியில் மழைநீர் தேங்கி சர்வீஸ் ரோடு சேதமாகும், கட்டிடங்களுக்குள் மழைநீர் புகும். மேலும், மானாமதுரை நகருக்கு செல்லும் சுரங்கப்பாதை வரை மழைநீர் கால்வாய் அமைக்கும் பணியும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அங்கு ரயில்வேக்கு சொந்தமான இடங்களை கையகப்படுத்தி பஸ் பயணிகள் ஏறும் வகையில் நிழற்குடை ஒன்றும் அமைக்க வேண்டும் என்றார்.

Related Stories: